பக்கம்:மணி பல்லவம் 1.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

கனிந்த நிலையில் கிடைத்ததற்காக வாசகர்களும், எழுதியவனும் நிச்சயமாகப் பெருமைப்பட முடியும். அவளுடைய பரிசுத்தமான மனச்சாட்சியை மதிப்பதற்கு மண்ணுலகத்து மதிப்பீடுகள் போதாதென்றாலும் முடிந்தவரை மதித்தாக வேண்டிய கடமை நமக்கு உண்டு. “பிறருக்காக நம்மை இழந்து விடுவதில் ஒரு சுகம் இருக்கிறது" என்று இளங்குமரன் தன் கல்வி, தவம் எல்லாவற்றையும் பொருட்படுத்தாது சுரமஞ்சரிக்குத் தன்னைக் கொடுக்கிறான். இவ்வளவு நல்ல கதாபாத்திரமாக வாய்த்ததற்காக இந்தக் கதாசிரியனும் அவளுக்கு ஏதோ ஒருவிதத்தில் நன்றி செலுத்தியாக வேண்டும். இந்த நாவலை அந்த அழகிய கதாபாத்திரத்திற்குச் சமர்ப்பணம் செய்வதைத் தவிர வேறெந்த வகையிலும் அந்த நன்றியைச் செலுத்த முடியாது என்பதால் இந்த நாவலைச் சுரமஞ்சரி என்ற கதாபாத்திரமே அடைவதாகப் பாவித்துக் கொள்கிறேன். கல்கியில் படிக்கும்போது பல்லாயிரக்கணக்கான வாசகர்களும் இதையே வரவேற்றார்கள். புத்தகமாகப் படிக்கும் பேறுபெற்றவர்களும் இப்படியே வரவேற்பார்கள் என்று நினைக்கிறேன்; நம்புகிறேன்.

இதைத் தொடர்கதையாக வெளியிடுவதில் பலவிதத்திலும் அன்புடன் ஒத்துழைத்த கல்கி அதிபர் திரு. சதாசிவம் அவர்களுக்கும், காரியாலயப் பெருமக்களுக்கும், நல்ல நூலாகக் கொணரும் தமிழ்ப் புத்தகாலயத்தாருக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவிக்கிறேன். கடைசி யாக ஒரு வார்த்தை இந்த நாவல் பொழுது போக்கிற்கு மட்டுமன்று, சிந்தனைக்கும் சேர்த்துத்தான். இதில் அழகு எவ்வளவு உண்டோ அவ்வளவிற்கு ஆழமும் உண்டு. படிப்பவர்கள் அந்த நோக்குடன் இதைப் படிக்க வேண்டும்.


சென்னை

1.6.1970

அன்பன்
நா. பார்த்தசாரதி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/7&oldid=1141560" இலிருந்து மீள்விக்கப்பட்டது