பக்கம்:மணி பல்லவம் 1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

மணிபல்லவம்

அங்கே அவனுக்குத் தெரிந்தது. அந்த எழிலரசியின் பல்லக்கு வந்து நின்றதைப் பார்த்ததுமே தாக்குவதற்கு வந்திருந்த யவனர்களில் மூவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஓடிவிட்டார்கள். அவள் பல்லக்கிலிருந்து கீழே இறங்கி வருவதைக் கண்ணுற்றதுமே இளங்குமரனைச் சூழ்ந்து தாக்கிக் கொண்டிருந்த மற்ற நான்கு யவனர்களும் தாக்குவதை நிறுத்திவிட்டு அவளை நோக்கிப் பயபக்தியோடு ஓடி வந்தார்கள். வணங்கிவிட்டு அவளுக்கு முன் கைகட்டி வாய் பொத்தி நின்றார்கள்.

“அடடா இந்தத் தடியர்கள்தானா?” என்று ஓவியன் மணிமார்பனை நோக்கிக் கேட்டுவிட்டு அலட்சியமாகச் சிரித்தாள் அந்தப் பேரழகி. ஒரு கையை இடுப்பில் ஊன்றிக் கொண்டு வனப்பாக அவள் வந்து நின்ற நிலையும் தன்னைத் தாக்கிய முரடர்கள் அவளைப் பணிந்து நிற்பதும் கண்டதுபோது இளங்குமரனுக்கு முதலில் திகைப்பும் பின்பு எரிச்சலும் உண்டாயிற்று. ‘ஒருவேளை அவளே அவர்களை ஏவித் தன்னைத் தாக்கச் சொல்லியிருக்கலாமோ’ என்று ஒரு கணம் விபரீதமானதொரு சந்தேகம் இளங்குமரனுக்கு ஏற்பட்டது. நிகழ்ந்தவற்றைக் கூட்டி நிதானமாக சிந்தித்துப் பார்த்தபோது ‘அவள் அப்படிச் செய்திருக்க முடியாது. முதல் நாள் மாலை கடற்கரையில் நடந்த மற்போரில் தன்னிடம் தோற்று அவமானமடைந்த யவன மல்லன்தான் தன்னை இப்படித் தாக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டு’மென்று தோன்றியது அவனுக்கு.

இளங்குமரனுக்குக் கேட்க வேண்டுமென்றே பேசுகிறவள் போல் இரைந்த குரலில் மணிமார்பனைப் பார்த்துக் கூறலானாள் அவள்.

“ஓவியரே! நான் இங்கே வந்து நின்றதுமே இந்த ஆச்சரியங்கள் நிகழ்வதைப் பார்த்து எனக்கு ஏதேனும் மந்திர சக்தி உண்டோ என்று வியப்படையாதீர்கள். காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்திலிருந்து யவனம் முதலிய மேற்குத்திசை நாடுகளுக்குச் செல்லும் பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/71&oldid=1141692" இலிருந்து மீள்விக்கப்பட்டது