பக்கம்:மணி பல்லவம் 1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

மணிபல்லவம்

அவ்வளவில் பல்லக்குகள் விரைந்து செல்லத் தொடங்கியதால் முல்லையின் பார்வையிலிருந்து இளங்குமரன் மறைந்தான். அவளுடைய இதழ்களிலிருந்து முறுவல் மறைந்தது. முகத்திலிருந்து மலர்ச்சி மறைந்தது. நெஞ்சிலிருந்து உற்சாகம் மறைந்தது. எதற்காகவோ இளங்குமரன் மேல் பெரிதாகக் கோபித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது அவளுக்கு. அதே சமயத்தில் அப்படிக் கோபித்துக் கொள்வது எதற்காக என்றும் அவளாலேயே மனத்தில் காரண காரியத்தை இணைத்துப் பார்க்க முடியவில்லை.

பல்லக்குகள் வெகுதூரம் முன்னுக்குப் போய்விட்டன. பல்லக்குச் சுமப்பவர்கள் சுமை உறுத்துவது தெரியாமலிருப்பதற்காகப் பாடிக் கொண்டு சென்ற ஒருவகைப் பாடல் ஒலி மெல்ல மெல்லக் குரல் நைந்து அவள் செவியில் கேட்டுக் கொண்டிருந்தது.

அப்பொழுதே நாளங்காடியின் இந்திரவிழா ஆரவாரங்களும், அழகும் திடீரென்று இருந்தாற் போலிருந்து குறைபட்டுப் போனது போலிருந்தது முல்லைக்கு. ‘இளங்குமரனின் ஓவியத்தை வரைந்து கொள்வதற்காக எட்டிக்குமரன் வீட்டுப் பேரழகி சுரமஞ்சரி இளங் குமரனையும் ஓவியனையும் முரடர்களிடமிருந்து காப்பாற்றிப் பல்லக்கில் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போகிறாளாம்’ என்று பக்கத்தில் கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்கள் தன்னிடம் கூறிய செய்தியைச் செவிகள் வழியே வாங்கி நெஞ்சில் ஏற்றுக் கொண்டு தாங்குவதற்கு வேதனையாயிருந்தது அவளுக்கு.

வீட்டிலிருந்து புறப்படும்போது ‘இந்தப் பிள்ளையாண்டானைத் துணைக்குக் கூப்பிடுகிறாயே முல்லை! இவன் ஊர் சுற்றும் முரடனாயிற்றே! இல்லாத வம்புகளையெல்லாம் இழுத்துக்கொண்டு வருவானே!’ என்பதைத் தந்தையார் எவ்வளவு குறிப்பாகச் சொன்னார். நான் அப்போதே தந்தையார் சொல்லிய குறிப்பைப் புரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/75&oldid=1141697" இலிருந்து மீள்விக்கப்பட்டது