பக்கம்:மணி பல்லவம் 1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

75

கொள்ளாமல் போனேனே. இந்த நாளங்காடி நாற்சந்தியில் திருவிழாக் கூட்டத்தில் நான் ஒருத்தி கூட வந்திருப்பது நினைவில்லாமல் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டாவது போகவேண்டுமே என்றும் எண்ணாமல், யாரோ ஒருத்தி கூப்பிட்டாளென்று பல்லக்கில் ஏறிக்கொண்டு போயிருக்கிறாரே! எவ்வளவு இறுகிப் போயிருக்க வேண்டும் இவர் மனம்?” என்று நினைந்து வருந்தினாள் முல்லை. இளங்குமரன் என்னும் எழில் வெள்ளம் தனக்கே சொந்தம்போல் தன்னோடு பாய்ந்து வந்த ஒரே காரணத்தால் நாளங்காடிக்கு வருகிறபோது கர்வப்பட்டுக் கொண்டிருந்தாள் முல்லை. இப்போது அந்தக் கர்வத்தை அவள் படுவதற்கில்லை. படவும் முடியாது. அவளுக்குக் கிடைத்த அந்தக் கர்வத்தில் பெருமையடையும் உரிமைக்குப் போட்டியிடப் பெருநிதிச் செல்வர் வீட்டுப் பெண்ணொருத்தியும் வந்து விட்டாள் போலும்! இளங்குமரனின் முகமும், கண்களும், தோற்றமும் அத்தகைய சிறப்பு வாய்ந்தவை. அவன் எவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாலும், எவரோடு பேசிக் கொண்டிருந்தாலும், எவரோடு நடந்து கொண்டிருந்தாலும் அப்படி நிற்கப் பெற்றவர்களுக்கும், பேசப் பெற்றவர்க்கும், நடக்கப் பெற்றவர்களுக்கும் தான் உடனிருக்கிறோம் என்பதையே ஒரு பெருமையாக நினைந்து மகிழும் கர்வத்தை அளிக்கும் பேரெழில் தோற்றம் இளங்குமரனுக்கு இருந்தது. அதனாலேயே காவிரிப்பூம்பட்டினத்தில் அவனுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அதனாலேயே நண்பர்களைக் காட்டிலும் நிறைய விரோதிகளும் இருந்தார்கள். ஒரு மனிதனுடைய இணையற்ற அழகு மற்றவர்கள் மனங்களில் பெருமையை விளைவிக்க வேண்டும். அல்லது பொறாமையை விளைவிக்க வேண்டும். இளங்குமரனுடைய அழகு இந்த இரண்டையுமே விளைவித்துக் கொண்டிருந்தது. இதைத் தவிரத்தானே தெரிந்து கெள்ள முடியாத பல காரணங்களாலும் தன்னை அழித்துவிடத் துடிக்கும் எதிரிகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/76&oldid=1141699" இலிருந்து மீள்விக்கப்பட்டது