பக்கம்:மணி பல்லவம் 1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

மணிபல்லவம்

இருக்கிறார்கள் என்பதை முன்னாள் இரவு சம்பாபதி வனத்தில் நடந்தவற்றால் அவன் தெரிந்து கொள்ள முடிந்திருந்தது. தன்னுடைய வாழ்க்கை சில சமயங்களில் தனக்கே பெரும் புதிராக இருப்பதையும் அவன் உணர்ந்திருந்தான்.

காலைப்போது தளர்ந்து பகல் வளர்ந்து கொண்டிருந்தது. தனக்குப் புதியதும் அடர்த்தி நிறைந்ததுமான காட்டுப் பகுதிக்கு வழி தப்பி வந்துவிட்ட மான் குட்டியைப் போல் நாளங்காடிக் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தாள் முல்லை. துணைக்குத் தன்னோடு வந்தவன் இன்னொருத்தியோடு துணையாகப் போய்விட்டான் என்பதை நினைக்கும்போது அவளுக்கு ஏக்கமும் ஆற்றாமையும் இணைந்து உண்டாயின. புற வீதியையும் அதனோடு சார்ந்த புறநகரப் பகுதிகளையும் தவிரப் பட்டினப்பாக்கம், நாளங்காடி போன்ற கலகலப்பு மிக்க அந்நகர்ப் பகுதிகளுக்கு அவள் துணையின்றித் தனியாக வருவதற்கு நேர்ந்ததில்லை. தந்தையோ தமையனோ துணையாக வரும்போதுதான் பூம்புகாரின் ஆரவாரமயமான அகநகர்ப்பகுதிகளுக்குள் அவள் வந்து போயிருக்கிறாள். சாதாரண நாட்களிலேயே கூட்டத்துக்குக் குறைவிருக்காது. தனியாக வந்தால் வழி மயங்குவதற்கும், வழிதவறுவதற்கும், வேறு தொல்லைகளுக்கும் ஆளாக நேரிடுமோ என்று அஞ்ச வேண்டிய அக நகரிலும் நாளங்காடியிலும் கோலாகலமாக இந்திரவிழாக் காலத்தில் கேட்கவா வேண்டும்? முல்லை சோர்ந்த விழிகளால் நான்கு பக்கமும் திரும்பிப் பார்த்தாள்.

கண்ணுக்கெட்டிய தூரம் கடைகளும் மக்கள் நெருங்கிய கூட்டமும், பாட்டும், கூத்தும், யானைகள், குதிரைகள், தேர்கள், சிவிகைகள் போன்ற ஊர்திகளும் அவற்றின் தோற்றம் முடிகிற இடத்தில் ஆரம்பமாகும் நெடுமரச் சோலைகளும், பரந்து விரிந்து தோன்றின. செவிகளிற் கலக்கும் விதவிதமான ஒலிகள், செவிகளைக் கலக்கும் வேறுவேறு பேச்சுக் குரல்கள், கண்ணிற் கலக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/77&oldid=1141700" இலிருந்து மீள்விக்கப்பட்டது