பக்கம்:மணி பல்லவம் 1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

77

பலவிதக் காட்சிகள், கண்ணைக் கலக்கும் அளவிலடங்காத காட்சிக் குவியல்கள். எதையும் தனியாகப் பிரித்துக் காணமுடியாத காட்சி வெள்ளம்! எதையும் தனியாகப் பிரிந்து உணர முடியாத பரபரப்பான நிலை!

தனக்கு எதிர்ப்பக்கத்தே அருகிலிருந்த மரங்களில் கட்டப்பட்டிருந்த யானைகளுக்குக் கரும்பு ஒடித்துக் கொடுக்கும் பாகர்களைப் பார்த்தாள் முல்லை, துதிக்கையை நீட்டிப் பாகர்களிடமிருந்து கரும்புக் கழிகளை வாங்கி வாய்க்குக் கொண்டுபோய் அரைத்துச் சாறு பருகும் அந்தப் பெரிய பெரிய யானைகளை வேடிக்கை பார்ப்பதுபோல் பார்த்தாள் அவள். அவளுக்கு அந்தக் காட்சியைத் தன் நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது. இளங்குமரனை துணைக்கு அழைத்துக் கொண்டு நாளங்காடிக்கு வருகிறபோது கரும்பின் இனிய சாற்றைப் பருகுவதுபோல நெஞ்சில் மெல்லிய நினைவுகளைச் சுவைத்துக் கொண்டு வந்தாள் அவள். இப்போதோ சுவைத்து முடித்த பின் எஞ்சும் சக்கையைப் போல் சாரமற்ற நினைவுகள் அவள் மனத்தில் எழுகின்றன. யானைவாய்க் கரும்பு போல் தனது இனிய நினைவுகளுக்குக் காரணமானதை எட்டிகுமரன் வீட்டு நங்கை கொள்ளை கொண்டு செல்வதை அவள் உணர்ந்தாள்.

பார்வைக்கு இலக்கு ஏதுமின்றிப் பராக்குப் பார்ப்பது போல நாளங்காடியின் ஒருபுறத்தில் நின்று நோக்கிக் கொண்டிருந்த முல்லைக்கு முன்னால் குதிரைகள் வந்து நின்றன. அவளண்ணன் கதக்கண்ணனும் அவனோடு வந்த மற்றவர்களும் தத்தம் குதிரைகள் மேலிருந்து கீழே இறங்கினார்கள்.

“முல்லை! இதென்ன? இப்படிப் பராக்குப் பார்த்துக் கொண்டு இங்கே நிற்கிறாய்! உன்னோடு துணைக்கு வந்த இளங்குமரன் எங்கே போனான்? படையல் வழிபாடு எல்லாம் முடிந்ததோ இல்லையோ?” என்று ஆவலுடனும் அவசரமாகவும் விசாரித்துக் கொண்டே முல்லைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/78&oldid=1141701" இலிருந்து மீள்விக்கப்பட்டது