பக்கம்:மணி பல்லவம் 1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

மணிபல்லவம்

அருகே வந்து நின்றான் கதக்கண்ணன். அவனுடன் குதிரைகளில் வந்த மற்றவர்களும் அடக்க ஒடுக்கமாகப் பக்கத்தில் நின்றார்கள்.

அந்த நேரத்தில் தன் அண்ணனை அங்கே கண்ட பின்பும் முல்லையின் முகத்தில் மலர்ச்சி பிறக்கவில்லை. இதழ்களில் நகை பிறக்கவில்லை. நாவிலிருந்து ‘வாருங்கள் அண்ணா’ என்பது போலத் தமையனை வரவேற்கும் மகிழ்ச்சி தழுவிய வார்த்தைகளும் பிறக்கவில்லை.

மறுபடியும் அவள் தமையன் அவளைக் கேட்கலானான். “இளங்குமரன் எங்கே முல்லை? உன்னை இங்கே தனியாக விட்டுவிட்டு ஊர் சுற்றப் போய் விட்டானா?”

“நான் அவரை எனக்குத் துணையாகக் கூட்டிக் கொண்டு வந்ததே தப்பு அண்ணா! புறப்படும் போது அவரைக் கூட்டிக் கொண்டு போக வேண்டாமென்று அப்பா சொன்னார். நான் அதையும் மீறி அவரைக் கூட்டிக் கொண்டு வந்ததற்கு எனக்கு நன்றாகப் பாடம் கற்பித்துவிட்டார், அவர் என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே போய்விட்டார் அண்ணா !”

“என்ன நடந்தது முல்லை? நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொல். நாங்கள் மிக அவசரமான முக்கிய காரியத்துக்காக இளங்குமரனைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறோம். உடனே அவனைப் பார்க்க வேண்டும். இந்தச் சமயத்தில் பார்த்து நீயும் அவன் மேல் உன்னுடைய கோபதாபங்களைக் காட்டிக் கொண்டிருந்தால் என்ன செய்வது?”

இப்படித் தன்னை நோக்கிக் கூறிய தமையன் கதக்கண்ணனின் முகத்தை நன்றாக உற்றுப் பார்த்தாள் முல்லை. வீரக்களை. சுடர் பரப்பும் அந்த முகத்திலும், கண்களிலும், பார்வையிலும், பேச்சிலும் ‘அவசரம் அவசரம்’ என்று தவித்துப் பிறக்கும் ஒருணர்வு முந்திக் கொண்டு நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/79&oldid=1141702" இலிருந்து மீள்விக்கப்பட்டது