பக்கம்:மணி பல்லவம் 1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

83

பொங்கச் சுரமஞ்சரி பல்லக்கினுள்ளேயிருந்து இறங்கி விரிப்பின் மேல் கால் வைத்து நடந்தாள். நடந்து வரும்போதே பிறழ்ந்து பிறழ்ந்து சுழலும் கெண்டைமீன் விழிகளால் இளங்குமரனும் ஓவியனும் இன்னும் பல்லக்கினுள்ளேயே தங்கி வீற்றிருப்பதை அவள் பார்த்துக் கொண்டாள்.

“வசந்தமாலை! அவர்கள் இன்னும் பல்லக்கிலேயே உட்கார்ந்திருக்கிறார்கள், பார். நீ போய் இறக்கி அழைத்துக் கொண்டு வா” என்று தோழியை நோக்கிக் கட்டளை பிறந்தது.

வசந்தமாலை அவர்கள் பல்லக்கின் அருகில் சென்று விநயமான குரலில் பணிவோடு அழைத்தாள்.

“ஐயா, இறங்கி வாருங்கள். உள்ளே போகலாம்.”

இளங்குமரன் இறங்கி நடந்தான். ஆனால் வேண்டுமென்றே விரிப்பிலிருந்து விலகித் தரையில் நடந்தான். அவர்கள் அப்படிச் செய்யும்போது தான் மட்டும் விரிப்பில் நடந்து போவது நன்றாயிராது என்று எண்ணி இரண்டாவதாகப் பல்லக்கிலிருந்து கீழே இறங்கிய மணிமார்பனும் இளங்குமரனைப் பின்பற்றித் தரையில் நடந்தான்.

இளங்குமரனின் தோற்றத்தையும் கம்பீரமான நடையையும் பார்த்தால் பேசுவதற்கு அச்சமும் தயக்கமும் ஏற்பட்டது வசந்தமாலைக்கு. ஆனாலும் அவற்றை நீக்கிக் கொண்டு, “ஐயா, விரிப்பின் மேல் நடந்து வாருங்கள், விரிப்பு உங்களுக்காகத்தான் விரித்திருக்கிறது" என்று மெல்லக் கூறினாள் அவள். எடுத்தெறிந்து பேசுவதுபோல்இளங்குமரனிடமிருந்து பதில் வந்தது அவளுக்கு. தனக்கே பன்மை மரியாதை கொடுத்துப் பேசினான் அவன்.

“பிறருடைய வழிக்கு அடங்கி நடந்து நமக்குப் பழக்கமில்லை. எந்த இடத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நாம் எப்படி நடந்து போக வேண்டுமென்று நமக்குத் தெரியும்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/84&oldid=1141745" இலிருந்து மீள்விக்கப்பட்டது