பக்கம்:மணி பல்லவம் 1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

தமிழகத்தில் சரித்திர நாவல்கள் என்றால் அரசர், அரசி, படைவீரர், படைத்தலைவர், அமைச்சர் என்று கதாபாத்திரங்களை வகுத்துக் கொண்டு எழுதுவதே இது வரை வழக்கம். இதனால் ஆண்ட வாழ்வின் ஒரு பகுதி ஒளி நிறுவிக் காட்டப்பட்டதே தவிர ஆளப்பட்ட வாழ்வு என்ற பெரும்பகுதி விவரிக்கப் பெறவில்லை. பேரரசர் பலர் போர்கள் செய்து வெற்றி வாகை சூடி வீரவாழ்வு வாழ்ந்தும், அரசவையில் அரியணையில் அமர்ந்தும், பீடுறக் காலங்கழித்த நாளில் அவர்கள் அங்ஙனம் காலங்கழிக்கக் காரணமான மக்களும் பல்லாயிரவர் வாழ்ந்திருக்கத்தானே வேண்டும்?

அந்த மக்களிலும் வீரர்கள் இருந்திருப்பார்கள். பல்வேறு சமயச் சார்புள்ள விதவிதமான மக்கள் விதவிதமாக வாழ்ந்திருப்பார்கள். ஈடுசொல்ல முடியாத அழகர்கள் இருந்திருப்பார்கள். அரச குலத்து நங்கையரை அழகிற் புறங்காணும் பேரழகிகள் இருந்திருப்பார்கள். அவர்களிடையே நளினமான உறவுகள், காதல், களிப்பு எல்லாம் இருந்திருக்கும். வாழ்க்கைப் போராட்டங்கள் இருந்திருக்கும். ஆனால் பெரும்பான்மையானதும், சரித்திரத்தை உண்டாக்கியதும், சரித்திரத்தின் பொன்னேடுகளில் நாயகம் கொண்டாடும் பேரரசர்களை அப்படிப் பேரரசர்களாக ஆக்கியதுமான, இந்த மக்கள் கூட்டத்தின்மேல் வரலாற்று நாவலாசிரியர்கள் எந்த அளவு ஒளியைப் படர விட்டார்கள்? எந்த அளவு கவனம் செலுத்த முயன்றார்கள்?

பழைய வாழ்வின் இந்த அழகிய பகுதி மறைந்தே இருக்கிறது. மணி பல்லவம் கதையின் முக்கிய நோக்கங்களில் இந்த அழகிய வாழ்க்கையைப் புனைந்து கூற முயல்வதும் ஒன்று. மணிபல்லவம் கதையின் நாயகன் ஓர் அற்புதமான இளைஞன். காவிரிப்பூம்பட்டினத்துப் பொது மக்களிடையே வாழ்ந்து வளர்ந்து அழகனாய், அறிஞனாய், வீரனாய், உயர்ந்து ஓங்குகிறவன். பருவத்துக்குப் பருவம் அவனுடைய விறுவிறுப்பான வாழ்வில் மாபெரும் மாறுதல்கள் நிகழ்கின்றன. அதனால் இந்தக் கதையின் ஒவ்வொரு பகுதிக்கும் பாகம் என்று பெயரிடாமல் கதாநாயகனின் வாழ்க்கை மாறுதல்களை மனத்திற்கு கொண்டு பருவம் என்று பெயரிடுகிறேன். கதாநாயகனின் வாழ்வில் நிகழும் பெரிய பெரிய மாறுதல்களுக்கு எல்லாம் மணிபல்லவத் தீவு காரணமாகிறது. அவனுடைய வாழ்வில் இறுதிவரை விளங்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/9&oldid=1141565" இலிருந்து மீள்விக்கப்பட்டது