பக்கம்:மணி பல்லவம் 1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

91

“முல்லை! அதிகமாக உன்னிடம் ஒன்றும் சொல்வதற்கில்லை. பலவிதத்திலும் இளங்குமரனுக்குப் போதாத காலம் இது. சிறிது காலத்துக்கு வெளியே நடமாடாமல் அவன் எங்கேயாவது தலைமறைவாக இருந்தால்கூட நல்லதுதான். ஆனால் நம்மைப் போன்றவர்களின் வார்த்தையைக் கேட்டு அடங்கி நடக்கிறவனா அவன்?”

“நீங்கள் சொன்னால் அதன்படி கேட்பார் அண்ணா! இல்லாவிட்டால் நம் தந்தையாரோ, அருட்செல்வ முனிவரோ எடுத்துக் கூறினால் மறுப்பின்றி அதன்படி செய்வார். சிறிது காலத்துக்கு அவரை நம் வீட்டிலேயே வேண்டுமானாலும் மறைந்து இருக்கச் செய்யலாம்!”

“செய்யலாம் முல்லை! ஆனால் நம் இல்லத்தையும் விடப் பாதுகாப்பான இடம் அவன் தங்குவதற்கு வாய்க்குமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் நான். அவனைப் பற்றிய பல செய்திகள் எனக்கே மர்மமாகவும் கூடவும் விளங்காமலிருக்கின்றன. முரட்டுக் குணத்தாலும் எடுத்தெறிந்து பேசும் இயல்பாலும் அவனுக்கு இந்த நகரில் சாதாரணமான பகைவர்கள் மட்டுமே உண்டு என்று நான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போதோ இவற்றையெல்லாம் விடப் பெரியதும் என்னால் தெளிவாக விளங்கிக் கொள்ளமுடியாததுமான வேறொரு பகையும் அவனுக்கு இருக்கிறதெனத் தெரிகிறது. முல்லை! எது எப்படி இருந்தாலும் இதைப் பற்றி நீ அதிகமாகத் தெரிந்து கொள்ளவோ, கவலை கொள்ளவோ அவசியமில்லை. ஆண் பிள்ளைகள் காரியமென்று விட்டுவிடு.”

தமையன் இவ்வாறு கூறியதும், முதல் நாள் நள்ளிரவுக்கு மேல் அருட்செல்வ முனிவர், இளங்குமரன் இருவருக்கும் நிகழ்ந்த உரையாடலைத் தான் அரைகுறையாகக் கேட்க நேர்ந்ததையும், முனிவர் இளங்குமரனுக்கு முன் உணர்ச்சி வசப்பட்டு அழுததையும் அவனிடம் சொல்லிவிடலாமா என்று எண்ணினாள் முல்லை. சொல்வதற்கு அவள் நாவும்கூட முந்தியது. ஆனால் ஏனோ சொற்கள் எழவில்லை. கடைசி விநாடியில் ‘ஆண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/92&oldid=1141755" இலிருந்து மீள்விக்கப்பட்டது