பக்கம்:மணி பல்லவம் 1.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

97

“இதோ பாருங்கள் ஐயா! படம் அற்புதமாக வாய்த்திருக்கிறது” என்று ஓவியம் வரையப்பெற்ற திரைச் சீலையை உயரத் தூக்கி நிறுத்திக் காணுமாறு செய்தான் மணிமார்பன். இளங்குமரனிடமிருந்து இதற்கும் பதில் இல்லை.

சுரமஞ்சரிதான் வியந்து கூறினான். “படத்திலிருந்து அப்படியே நீங்கள் இறங்கி நடந்து வருவதுபோல் தத்ரூபமாக இருக்கிறது. ஓவியரை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை.”

“பாராட்டு இருக்கட்டும்! அது வாயிலே சொல்லாகப் பிறந்து செவியிலே ஒலியாக மடிவது அதனால் வயிறும் நிரம்பாது! வாழ்வும் நிரம்பாது! ஓவியம் நன்றாக இருந்தால் நூறு பொற் கழஞ்சுக்குப் பதில் நூற்றைம்பது பொற் கழஞ்சாகக் கொடுத்து மகிழுங்கள்” என்று அதுவரை பேசாமலிருந்த இளங்குமரன் அவளுக்குத் துணிவாக மறுமொழி கூறினான்.

“கொடுத்து மகிழ்வதைப் பற்றி எங்களுக்குப் பெருமை தான்! ஆனால் அன்போடும், மதிப்போடும் கொடுப்பதை வாங்கி மகிழ்கிற சுபாவம் சிலருக்கு இல்லாமற் போய் விடுகிறதே! அதற்கு என்ன செய்வது?”

முதல் நாள் கடற்கரை நிகழ்ச்சியைக் குறிப்பாகக் கூறிக் குத்திக் காட்டுவதுபோல் இளங்குமரனைச் சொற்களால் மடக்கினாள் சுரமஞ்சரி. இந்த வார்த்தைகளைக் கூறும்போது தன் கழுத்தில் அணிந்திருந்த மணி மாலையைத் தொட்டு விளையாடியது அவள் வலக்கரம். சகோதரியின் சாதுரியமான பேச்சைக் கேட்டு வானவல்லி புன்னகை புரிந்தாள்.

இளங்குமரன் அங்கிருந்து புறப்படச் சித்தமானான். “தம்பி! ஓவியத்தை முடித்துக் கொடுத்துவிட்டு உனக்குச் சேரவேண்டிய பொற்கழஞ்சுகளை வாங்கிக் கொண்டு போய்ச் சேர். நான் வருகிறேன். வாய்ப்பிருந்தால் மறுபடியும் எங்காவது சந்திக்கலாம்” என்று மணிமார்பனிடம்

ம-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/98&oldid=1141764" இலிருந்து மீள்விக்கப்பட்டது