சீனத்துக் கப்பலிலிருந்து இறங்கி நடந்த போது, ‘உங்கள் கருணை எனக்குத் தேவையில்லை. என் மாளிகைக்குப் போய்ச் சேரும் வழி எனக்குத் தெரியும்’ என்று சீற்றத்தோடு அலட்சியமாக இளங்குமரனிடம் பேசியிருந்தாலும் சுரமஞ்சரியின் மனம் அதன் பின்னரும் அவனுக்காகவே ஏங்கியது. அவனுக்காகவே தவித்தது. அதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
அவள் அவனைப் பிரிந்து சிறிது தொலைவு செல்வதற்குள்ளேயே அந்தப் பக்கத்தில் துறைமுக வாயிலின் அருகே கூடி நின்று கொண்டிருந்த அவளுடைய தந்தையாரின் கப்பல் ஊழியர்கள் பயபக்தியோடு ஓடிவந்து அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் முகங்களில் ஆர்வ வெள்ளம் பாய்ந்தது.
“எல்லார் வயிற்றிலும் பாலை வார்த்தீர்கள், அம்மா! நேற்று நீராட்டு விழாவில் நீங்கள் காணாமற் போனதிலிருந்து நமது மாளிகையே கவலையில் ஆழ்ந்திருக்கிறது. நீங்கள் காணாமற்போன செய்தி தெரிந்த உடனே நேற்று மாலை கழார்ப் பெருந்துறையிலிருந்து காவிரியின் சங்கமுகம் வரை தேடிப் பார்ப்பதற்காகப் பல படகுகளை அனுப்பினார் உங்கள் தந்தையார். வெகுநேரம் தேடிவிட்டுப் படகுகள் எல்லாம் திரும்பிவிட்டன. உங்களைத் தேடுவதற்காக நம் ஆட்கள் எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். உங்கள் வரவை இப்போதே ஓடிப்போய் மாளிகையில் தெரிவிக்கிறோம். தெரிவித்து விட்டு உங்களை அழைத்துச் செல்வதற்குத் தேரும் கொண்டு வருகிறோம். அதுவரை இதோ இங்குள்ள நமது பண்டசாலையில் அமர்ந்திருங்கள்” என்று கூறிச் சுரமஞ்சரியை அழைத்துப் போய்த் துறைமுக வாயிலின்