அமைதியான இரவு நேரத்தில் பட்டினப்பாக்கத்து மாளிகையில் பெருநிதிச் செல்வரின் தனிமையான அந்தரங்க மண்டபத்தில், அவரும் நகை வேழம்பரும் நேருக்கு நேர் நின்றார்கள். பெருநிதிச் செல்வரின் அளவிட முடியாத நிதிச் செல்வமும் அந்த மண்டபத்தில் தான் இரத்தின குவியலாகவும், முத்துக் குவியலாகவும், தந்தங்கள், பட்டுப் பீதாம்பரங்கள், அணிகலன்களின் குவியலாகவும் பொற்காசுகளாகவும் குவிந்து கிடந்தன.
மண்டபத்துக்குள் கீழே கிடந்த இரத்தினக் குவியலிலிருந்து ஒரே ஒரு பெரிய சிவப்புக்கல் நகைவேழம்பருடைய முகத்தில் போய்ப் பதிந்துகொண்டு மின்னுவது போல் அவரது ஒற்றைக்கண் சிவந்து குரூரமாக மின்னியது. பெருநிதிச் செல்வர் தணிந்த குரலில் அவரிடம் கேட்டார்:
“இன்றைக்கு என்ன இவ்வளவு சீற்றம்? பிரளயம் புகுந்ததுபோல் புகுந்து மாளிகையையே ஒரு கலக்குக் கலக்கி விட்டீர்கள்?”
“எனக்கு உங்கள் மேல் அடக்க முடியாத கோபம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மாளிகையையும், உங்களையும், இங்கு குவிந்து கிடக்கும் செல்வத்தையும் அழித்தொழித்து விட்டுப் போய்க் காவிரியில் தலை முழுக வேண்டும்போல் அவ்வளவு ஆத்திரத்தோடு வந்தேன்!”
“காரணம் என்னவோ?”
“காரணமா? இதோ இந்தக் கையைப் பாருங்கள். தெரியும்!” நகைவேழம்பர் தமது வலது கையைத் தூக்கிக் காண்பித்தார். மணிக்கட்டுக்குக் கீழே முழங்கையின் நடுவே ஒரு சுற்றுச் சிவந்து தடித்து வீங்கியிருந்தது அந்தக் கை.
“இந்தக் கை ஒத்துழைக்கவில்லையானால் நீங்கள் இவ்வளவு செல்வத்தைக் குவித்திருக்க முடியுமா?”