உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

398

மணிபல்லவம்

தவிர்க்க முடியாத காரணங்களால் நகைவேழம்பர் என்னும் ஒரே ஒரு மனிதருக்கு முன் தாமே அடிமை போல் நின்று தணிந்துபோக வேண்டிய நிலை அன்று இரவில் அவருக்கு நேர்ந்துவிட்டது.

வெளிப்படையாக நேருக்கு நேர் அந்த ஒற்றைக்கண் மனிதரிடம் பணிந்தாற் போலவும், பயந்தாற் போலவும் நடந்து கொண்டிருந்தாலும் பெருநிதிச் செல்வருடைய மனத்தில் அவர்மேல் தாங்க இயலாத கொதிப்பு விளைந்திருந்தது. நீண்ட நேரத்து விவாதத்துக்குப் பின்னர், நகைவேழம்பரை அமைதி கொள்ளச் செய்திருந்தார் பெருநிதிச் செல்வர்.

“நீலநாக மறவரை எதிர்த்து நேரடியாக ஒன்றும் செய்வதற்கில்லையென்பது உங்களுக்குத் தெரிந்த செய்திதான் நகைவேழம்பரே! அவருடைய வலிமை உங்களையே தளரச் செய்து விட்டதென்று ஒப்புக் கொள்கிறீர்கள். அவருடைய கைகளை உணர்விழக்கச் செய்வதற்கு என்னாலும் முடியாது. என் பாட்டனாலும் முடியாது என்று என்னிடமும் மறுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். இந்த இரவு நேரத்தில் நமக்குள் வீண் விவாதம் எதற்கு? நீலநாக மறவரை வீழ்த்துவதற்கு மறைமுகமாக ஏதாவது செய்ய இயலுமா என்று நிதானமாகச் சிந்திக்கலாம். இப்போது நீங்கள் உணவுக் கூடத்துக்குச் சென்று பசியாறிவிட்டு நிம்மதியாகப் போய் உறங்குங்கள்” என்று ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லி நகைவேழம்பரை உறங்க அனுப்பியிருந்த பெருநிதிச் செல்வர் தம்முடைய உறக்கத்தை இழந்திருந்தார்.

‘இந்த மாளிகையையும் உங்களையும் இங்கு குவிந்து கிடக்கும் செல்வத்தையும் அழித்தொழித்துவிட்டுப் போய்க் காவிரியில் தலைமுழுக வேண்டும்போல் அவ்வளவு ஆத்திரத்தோடு வந்திருக்கிறேன்’ என்று நகைவேழம்பர் குமுறலோடு கூறியிருந்த சொற்களை நினைத்து நினைத்துக் கொதிப்படைந்தார். நச்சுப் பாம்பு வளர்ப்பது போல் நகைவேழம்பரை வளர்த்ததின் பயன் தம் மேலேயே அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/104&oldid=1149904" இலிருந்து மீள்விக்கப்பட்டது