உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

402

மணிபல்லவம்

“அங்கே வேறு யாராவது உடனிருந்தார்களா?”

“அந்நியர் யாருமில்லை. வழக்கமாக அவருடைய பகுதியில் காவலுக்கு இருக்கும் காவலன் மட்டும் இருந்தான்.”

“நல்லது! நீ உறங்கப் போ. இப்படி ஒரு பெரிய காரியத்தை இன்றிரவு சாதித்ததாக நினைத்துக் கொண்டே தூக்கத்தை விட்டுவிடாமல் உடனே மறக்கப் பழகிக்கொள். நாளைக்குப் பொழுது விடிந்ததும் நகைவேழம்பர் எங்கே? என்று யாராவது கேட்டால் பதறாமல் நீயும் அதே கேள்வியைத் திருப்பிக் கேட்க முற்படுகிற துணிவையும் பெற்றுக் கொள்” என்று சொல்லிக் கொடுமை தோன்றச் சிரித்தார் பெருநிதிச் செல்வர்.

அப்போது நள்ளிரவுக்கு மேலும் சிறிது நாழிகை ஆகியிருந்தது. பெருமாளிகையின் எல்லா மாடங்களிலும் தீபங்கள் அணைக்கப் பெற்று இருள் சூழ்ந்திருந்தது. பெருநிதிச் செல்வர் தம்முடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான சில ஊழியர்களோடு நகைவேழம்பர் படுத்திருந்த பகுதிக்குச் சென்றார். இருண்டு போயிருந்த அந்தப் பகுதியில் மயான அமைதி நிலவியது. அந்த இருளின் நடுவே திசைக்குத் திசை, மூலைக்கு மூலை நகைவேழம்பரின் கோரமான முகம் தோன்றி ‘என்னை இப்படியா செய்தாய்’ என்று பயங்கரமாக அலறுவதுபோல் பெருநிதிச் செல்வர் பிரமை கொண்டார். அவரும் அவருடன் துணைக்கு வந்திருந்த ஊழியர்களும். இருளில் தட்டுத் தடுமாறி நடந்து நகைவேழம்பரின் கட்டிலை நெருங்கினார்கள். கட்டிலுக்கு அருகில் எங்கிருந்தோ சிறகடித்துப் பறந்த வெளவால் எழுப்பிய ஓசையைச் செவியுற்று இயல்பான பயத்தின் காரணமாக நடுங்கிப் பின்புறம் நகர்ந்தார் பெருநிதிச் செல்வர். வியர்வையால் சொட்டச் சொட்ட நனைந்திருந்த அவருடைய பெரிய உடலின் சிறிய இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. கை, கால்கள் நடுங்கின. காலடியில் பரிசாரகர் பால் கொண்டு வந்திருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/108&oldid=1149908" இலிருந்து மீள்விக்கப்பட்டது