நா. பார்த்தசாரதி
403
பொற்கலம் இடறியது. உதறல் எடுத்து வலுவிழந்திருந்த கை விரல்களால் அவர் கட்டிலில் தடவினார். பொற்கலத்து நச்சுப் பாலைப் பருகியிருந்த உடல் கட்டிலில் தாறுமாறாக உணர்விழந்து கிடந்தது. போர்வையை இழுத்து அந்த உடலைத் தலை முதல் கால்வரை மூடினார் பெருநிதிச் செல்வர்.
“ஒற்றைக் கண்ணும் மூடி விட்டது” என்று பயத்தினாற் குழறும் குரலில் உடனிருந்தவர்களிடம் சிரிக்க முயன்று கொண்டே கூறினார் அவர். சிரித்துக் கொண்டே கூற முயன்றாரே தவிரச் சிரிக்கும்போது தேகமே பற்றி எரிவது போல் வெம்மையுற்றது. தன்னுடைய சிரிப்பைச் சாடுவதைப் போல் வேறொரு பயங்கரச் சிரிப்பும் அந்த இருட்டில் எங்கிருந்தோ ஒலிப்பதாகக் கற்பனை செய்து கொண்டு தவித்தது அவர் மனம் கொடுமையும், சூழ்ச்சியும், அளவற்றுப் புரியும் திறமை வரம்பும் கடந்து தம் உடம்பிலும், மனத்திலும் இயல்பாக எவ்வளவு கோழைத்தனம் கலந்திருக்கிறது என்பதை அந்த இருட்டில் அவர் புரிந்து கொண்டார்.
“கட்டிலை இப்படியே தூக்கிக் கொண்டு போய்ப் பாதாள அறையில் புலிக் கூண்டுகளுக்கு நடுவில் வையுங்கள்” என்று உடன் வந்திருந்த ஊழியர்களுக்குக் கட்டளையிட்டார் அவர். அச்சத்தினால் தன்னியல்பான ஒலியும் கம்பீரமும் அவருடைய குரலிலிருந்து பிரிந்து போயிருந்தன. ஊழியர்கள் அவருடைய கட்டளையைச் செய்ய முற்பட்டனர். இருட்டில் கட்டில் தூக்கப் பெற்றுப் புறப்பட்டது.
“இனிமேல் இந்தப் பகுதி பகலிலும் இப்படி இருண்டு கிடக்க வேண்டியதுதான். அந்தப் பாவியின் ஆவி குடியிருக்கிற இடத்துக்கு ஒளி வேறு வேண்டுமா?” என்று தனக்குத்தானே கூறிக் கொள்வதுபோல் அவர் இரைந்து கூறியபோது மீண்டும் அதே பேய்ச் சிரிப்பு ஒலிப்பதாக அவருடைய மனம் கற்பனை செய்தது. கட்டிலைத் தூக்கிக்