பக்கம்:மணி பல்லவம் 2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

412

மணிபல்லவம்

ஒவ்வொரு வார்த்தையாகத் தயங்கித் தயங்கி நிறுத்திக் கேட்டார்.

“நீங்களும் நானும் சிந்திக்க வேண்டிய விநாடிகளில் இவர்களைப் போன்ற ஊழியர்களும் உடனிருக்க வேண்டியது அவசியம்தானா?”

“அவசிய அநாவசியங்களைச் சிந்தித்துச் செயல்படுகிற நிலையில் இப்போது நான் இல்லை. நீங்கள் என்னை அப்படி இருக்கவும் விடவில்லை. ‘என்னைப் போல் ஒருவன் உங்களுக்கு அவசியமா இல்லையா?’ என்று நீங்களே சிந்தித்து உடனடியாக முடிவுகட்டி விட்ட பின் நான் சிந்திக்க என்ன இருக்கிறது? நான் அநாவசியமென்று நீங்கள் தீர்மானம் செய்தபின் நீங்கள் எனக்கு அவசியம் என்று நம்பி என்னை நானே ஏமாற்றிக் கொள்ளலாமா!”

இந்தக் கேள்வியின் பிடியிலிருந்து விடுபட்டுத் தாம் என்ன மறுமொழி கூறுவதென்று தெரியாமல் திகைத்தார் பெருநிதிச் செல்வர். உயிர்ப் பயமும், ஏவலுக்குத் தலை வணங்கும் ஊழியர்களுக்கு முன் இப்படி அவமானப்பட்டுக் கொண்டிருக்கிறோமே என்ற நாணமும் சேர்ந்து அவரை ஆட்கொண்டு அவருக்குப் பேசுவதற்கு வார்த்தைகள் கிடைக்காதபடி ஆக்கியிருந்தன.

பேசவராத உணர்ச்சிகளுக்கும் பேச வேண்டிய சொற்களுக்கும் நடுவே அகப்பட்டுக் கொண்டு அவர் திணறுவதை நகைவேழம்பர் கண்டு கொண்டார். தமக்கும் பெருநிதிச் செல்வருக்கும் இடையே உள்ள நட்பு, பகை, இரகசியங்கள் எல்லாம் ஊழியர்களும் விளங்கிக் கொள்ளும்படி தெரிவது நல்லதல்ல என்பதை அவராலும் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒரு கையால் சங்கிலியைப் பற்றிக் கொண்டு மற்றொரு கையால் ஊழியர்களை மேலே வருமாறு குறிப்புக் காட்டினார். கிழே பெருநிதிச் செல்வர் நின்ற இடத்திலிருந்து சிறிது விலகி ஒதுங்கி நின்றிருந்த ஊழியர்கள் நகைவேழம்பர் தங்களை மேலே வரச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/118&oldid=1149918" இலிருந்து மீள்விக்கப்பட்டது