306
மணிபல்லவம்
“பாவிப் பெண்ணே! இப்படி எங்களையெல்லாம் கதிகலங்கச் செய்யலாமா?” என்று நெஞ்சம் நெகிழ்ந்து கதறியவாறே ஆவலோடு ஓடிவந்து தழுவிக் கொண்டாள், சுரமஞ்சரியின் அன்னை. “என்ன நடந்தது? எப்படித் தப்பிப் பிழைத்தாய்? யார் காப்பாற்றினார்கள்?” என்று எல்லாருமே அவளைத் தூண்டித் தூண்டிக் கேட்டார்கள்.
யாரோ ஒரு படகோட்டியின் உதவியால் கப்பல் கரப்புத் தீவை அடைந்ததாகவும், காலையில் அங்கிருந்து ஏதோ ஒரு கப்பலில் இடம் பெற்றுத் துறைமுகத்தை அடைந்ததாகவும், உண்மையைச் சற்றே மாற்றிக் கூறினாள் சுரமஞ்சரி. தந்தையாரையும் நகைவேழம்பரையும் அருகில் வைத்துக் கொண்டு, இளங்குமரன் தன்னைக் காப்பாற்றியதைச் சொல்வதற்கு அவள் விரும்பவில்லை. அந்தச் சமயத்தில் அவள் கூறியதில் யாரும் அவநம்பிக்கை கொள்ளவும் இல்லை.
“எப்படியானாலும் மறுபிறப்புப் பிறந்தது போல நீ உயிர் பிழைத்து வந்தாயே, அதுவே போதும். காவிரித் தாய் உன்னைக் காப்பாற்றியிருக்கிறாள்! அந்தப் படகோட்டியும், கப்பல் தலைவனும் யாரென்று சொன்னால் உனக்கு உதவியதற்காக அவர்களுக்கு வேண்டிய பரிசுகளை வாரி வழங்கச் சித்தமாயிருக்கிறேன், மகளே!” என்றார் தந்தையார்.
“சமயம் வாய்க்கும்போது அவர்களை உங்களுக்குக் காண்பிக்கிறேன், அப்பா!” என்று பதில் கூறினாள் சுரமஞ்சரி.
“சந்தர்ப்பம் எப்படி நேர்கிறது பார்த்தாயா? பெரிய, பெரிய கப்பல்களுக்கு உரிமையாளனான என்னுடைய மகள் எவனுடைய கப்பலிலோ இடத்துக்குப் பிச்சையெடுக்க வேண்டியதாய் நேர்ந்திருக்கிறதே” என்று தம் மனைவியிடம் கூறினார் எட்டிப் பட்டம் பெற்ற பெருநிதிச் செல்வர். அவருக்கு எப்போதுமே தம்முடைய பெருமைதான் நினைப்பு.