உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

415

“சந்தேகத்துக்கு இடமிருப்பதைப் போலவே சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளவும் இடமிருக்கிறது. சற்றுமுன் நான் எந்த நிலையில் இருந்தேன் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்களையெல்லாம் கூண்டோடு எமபுரிக்கு அனுப்பும் வாய்ப்பு என் கைகளில் இருந்தது. ஏன் அந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை? அதுதான் போகட்டும். இப்போது இந்த விநாடியில்கூட நீங்கள் தன்னந்தனியாகத்தான் என் எதிரில் நிற்கிறீர்கள். நான் உங்களை ஏன் விட்டு வைத்திருக்கிறேன்? நம்பிக்கையை உண்டாக்கிக் கொள்ள ஒரே வழிதான் இருக்கிறது. அதை நீங்கள் செய்ய வேண்டும்.”

“என்ன செய்ய வேண்டும் நான்?”

“பெரிதாக ஒன்றும் செய்யவேண்டாம். அவநம்பிக்கை கொள்ளாமல் இருக்க வேண்டும். நம்பிக்கை வளர அதுவே போதும்.”

பெருநிதிச் செல்வர் நகைவேழம்பரின் ஒற்றைக் கண்ணில் அந்த நம்பிக்கையைத் தேடுகிறவர் போல் அவரையே பார்த்துக் கொண்டு நின்றார். நகைவேழம்பர் அவருடைய சஞ்சலத்தைக் கண்டு சிரித்தார்.

“நான் பழைய நாட்களில் நடிகன். முகத்திலும், கண்ணிலும் எந்த உணர்ச்சியின் சாயலையும் என்னால் மறைத்தும், மாற்றியும் காண்பிக்கச் செய்யமுடியும். என் முகத்தையும் கண்ணையும் பார்த்த நீங்கள் ஒன்றும் தெரிந்து கொண்டுவிட முடியாது. என் மனத்தையும் நான் கூறிய சொற்களையும் நம்பினால் என்னோடு வாருங்கள்.”

“அவற்றிலும் நடிப்பு இருக்க முடியாதென்பது என்ன நிச்சயம்?”

“இப்படி வாதம் புரிந்தால், இதற்குப் பதிலே சொல்ல முடியாது! மறுபடியும் முன்பு சொல்லியதையே திருப்பிச் சொல்கிறேன். நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கு ஒரே வழி அவநம்பிக்கைப்படாமல் இருப்பதுதான்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/121&oldid=1149921" இலிருந்து மீள்விக்கப்பட்டது