428
மணிபல்லவம்
கதிரவனின் வண்ணம் மின்னியது. முகத்தில் அறிவின் அடக்கமும் நிறைந்த ஒளியும் தெரிந்தன. அழகிய கண்களில் துணிவினாலும் உடல் வலிமையாலும் தோன்றும் பழைய செருக்கு மறைந்து பேரமைதி - எதையோ பருகக் காத்திருக்கும் அமைதி தென்பட்டது. நாகலிங்கப் பூவை ஏந்தியிருந்த வலது உள்ளங்கை அந்தப் பூவின் நிறத்தைக் காட்டிலும் அதிகமாகச் சிவந்து காட்சியளித்தது. பொன்னில் வார்த்துப் பொருத்தினாற் போன்ற சுந்தர மணித் தோள்கள் காண்பவர் உள்ளத்தைக் கவர்ந்தன.
தான் இளங்குமரனுடைய சொற்களையே அவனிடம் திருப்பிச் சொல்லியதனால் அவன் மனம் நொந்து போயிருக்குமோ என்று வருந்திய முல்லை பேச்சை வேறு வழியில் மாற்றினாள்.
“நானும் அண்ணனும் இங்கு வரும்போது நீங்கள் கூடக் கண்கலங்கி வருத்தத்தோடு உட்கார்ந்திருந்தீர்களே? உங்கள் வருத்தத்தின் காரணத்தை நான் தெரிந்து கொள்ளலாமோ?”
“என்னுடைய தாயைப் பற்றி நினைவு வந்தது. கண்ணிலும், மனத்திலும் கலக்கமும் வந்தது.”
“மறக்க வேண்டியவர்களை நினைத்துக்கொண்டு வருந்துவதும், நினைக்க வேண்டியவர்களை மறந்துவிட்டு மகிழ்வதுமாகச் சிறிது காலத்துக்குள் எப்படி எப்படியோ மாறிவிட்டீர்கள் நீங்கள். தோற்றத்திலும் மாறிவிட்டீர்கள்? சிந்தனையிலும் மாறிவிட்டீர்கள்.”
“இன்னும் ஒன்றையும் அவற்றோடு சேர்த்துக் கொள். விருப்பங்கள், ஆசை, அன்பு இவற்றில்கூட மாறிவிட்டேன்.”
“இல்லை! மாற்றிக் கொண்டு விட்டீர்கள்.”
“எப்படியானால் என்ன? திருநாங்கூரில் இந்தப் பூம்பொழிலில் பழைய இளங்குமரனை நினைத்துத் தேடிக் கொண்டு வந்திருந்தால் உனக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும்.”