உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

429

முல்லை எந்த வழியிலிருந்து பேச்சை மாற்றினால் இருவருடைய மனமும் நோகாமல் உரையாடல் வளரும் என்றெண்ணினாளோ அந்த வழிக்கே திரும்பி வந்தது பேச்சு. முகத்தில் அறைவதுபோல் எடுத்தெறிந்து அவன் சொல்லிய ஒவ்வொரு சொல்லும் அவளை இரண்டாம் முறையாக அழுதுவிடுகின்ற நிலைக்குக் கொண்டு வந்தன.

அவள் முகம் வாடிவிட்டதைக் கண்டும் இளங்குமரன் புன்னகை புரிந்தான். “முல்லை! உன்னுடைய நிலையைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது.”

“பரிதாபத்தை உண்டாக்கியவரே அதைப் பார்த்து நகைப்பதில் பொருள் இல்லை" என்று இதழ்கள் துடிக்க சினத்தோடு பதில் கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள் முல்லை. அந்தச் சமயத்தில் பூம்பொழிலைச் சுற்றிப் பார்க்கப் போயிருந்த கதக்கண்ணன் திரும்பி வந்து சேர்ந்ததனால் அவர்களுடைய பேச்சு மேலே வளராமல் நின்றது. வளநாடுடையாருக்கு தன் அன்பையும் வணக்கங்களையும் தெரிவிக்கச் சொன்னான் இளங்குமரன்.

“வருகிற பெளர்ணமியன்று முல்லைக்குப் பிறந்த நாள் மங்கலம். அன்றைக்கு நீ காவிரிப்பூம் பட்டினத்துக்கு வர வேண்டும். முல்லை உனக்கு விருந்து படைக்கப் போகிறாள். எங்கள் தந்தையாரும் உன்னைக் காண்பதற்கு ஆவலாயிருக்கிறார். எங்களால் உன்னைக் காணும் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. உன்னையும் பார்த்தாயிற்று. முல்லையின் பிறந்தநாள் மங்கலத்துக்கு வரவேண்டுமென்றும் அழைத்தாயிற்று” என்று கதக் கண்ணன் மறுமொழி கூறியதைக் கேட்டு இளங்குமரன் சிறிது திகைத்தான். அந்தத் திகைப்பைப் பார்த்துவிட்ட கதக்கண்ணன், “ஏன் திகைக்கிறாய்? உன்னால் வர முடியாதா?” என்று சந்தேகத்தோடு கேட்டான்.

“கதக்கண்ணா! நீங்கள் இருவரும் என்னை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். குருகுலவாசம் முடியும் வரை நான் திருநாங்கூர்ப் பூம்பொழிவிலிருந்து எங்கும் வெளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/135&oldid=1150016" இலிருந்து மீள்விக்கப்பட்டது