நா. பார்த்தசாரதி
431
கொள்ள வேண்டிய முறைக்காகப் போய் விடை பெற்றுக் கொண்டு பூம்பொழிலின் வாயிலை நோக்கி நடந்தார்கள் அவர்கள். சிறிது தொலைவு நடந்ததும், தன் பின்னால் யாரோ தொடருவது போலக் காலடி ஓசை கேட்டுத் திரும்பினாள். வேறு யாருமில்லை; இளங்குமரன்தான். அவன் கண்களில் நீர் நெகிழ்ந்திருந்தது.
“முல்லை! இவற்றை உன்னுடைய பிறந்தநாள் மங்கலத்துக்கு நான் அளிக்கும் பரிசாக ஏற்றுக்கொள்.”
ஒற்றை ஓலையான ஒரே ஓர் ஏட்டையும், சற்று முன் கையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்த நாகலிங்கப் பூவையும் அவளுக்கு அளித்தான் அவன். முல்லையின் கைகள் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு முன் நீண்டிடாமல் தயங்கின. அந்த ஓலையை அவன் அப்போது தான் எழுதியதற்கு அடையாளம் போல் எழுத்தாணியும் கையில் இருந்தது.
“வாங்கிக்கொள், முல்லை!”
அவள் தயங்கியபடியே வாங்கிக் கொண்டாள். கதக்கண்ணன் முன்னால் விரைவாக நடந்து போயிருந்தான். ஏட்டில் முத்து முத்தாகக் கீறப்பட்டிருந்த எழுத்துக்களை ஆர்வத்தோடு படிக்கலானாள் அவள்.
சித்தம் தடுமாறச் செய்கை நினைவழியப்
பித்தம் தலைகிறங்கப் பார்க்குமே - இத்தரையில்
சித்திரம்போற் சேர்ந்த விழிநோக்கும் முல்லையெழில்
முத்துநகை பூக்கும் முகம்
என்று அழகாகக் கீறப்பட்டிருந்த அந்த வெண்பாவின் பொருளும், அதனோடு இருந்த நாகலிங்கப் பூவின் நறுமணமும் முல்லையைக் கனவுகளில் மூழ்கச் செய்தன. ஆனால் அக்கனவுகள் நீடிக்கவில்லை. அதன் கீழே ‘ஒரு காலத்தில் இந்தச் சிரிப்புக்குச் சற்றே ஆட்பட்டிருந்தவனின் வாழ்த்து’ என்று எழுதப்பட்டிருந்த வாக்கியத்தைப் படித்து விட்டு, ‘அதற்கென்ன அர்த்தம்?’ என்று அவனையே கேட்டு விடுவதற்காகச் சீற்றம் கொண்டு முல்லை தலை