உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

436

மணிபல்லவம்

தோழியோடு சகோதரி வானவல்லியையும் உடன் அழைத்துப் போகத் திட்டமிட்டிருந்தாள். ஓவியன் மணிமார்பன் தான் கூறியனுப்பியிருந்த செய்திகளை ஆலமுற்றத்தில் உரியவரிடம் போய்த் தெரிவித்திருப்பா னென்றே சுரமஞ்சரி நம்பினாள். அன்றியும் இளங்குமரன் ஆலமுற்றத்துப் படைக்கலச் சாலையில் இருப்பதாகவே அவளுக்கு எண்ணம்.

தன் எண்ணப்படி மாலையில் ஆலமுற்றத்துக்குப் புறப்படுமுன் அவள் அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். வசந்தமாலை அணிகலன்கள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்த வண்ணமிருந்தாள்.

தன் அலங்காரம் முடிந்ததும் “நீ போய் வானவல்லியையும் புறப்படச் சொல்லு” என்று தோழியை அனுப்பிவிட்டுக் காத்திருந்தாள் சுரமஞ்சரி. தோழி திரும்புவதற்கு வழக்கத்தை மீறிய நேரமாயிற்று.

தோழி திரும்பி வந்தபோது அவள் முகம் வாட்டம் கண்டிருந்தது.

“ஏன் இவ்வளவு நேரம்?”

“ஒன்றும் புரிந்துகொள்ள முடியவில்லை அம்மா! நமக்குத் தெரியாமலே இங்கே என்னவெல்லாமோ நடக்கிறது.”

“புரியும்படியாகத்தான் சொல்லேன்!”

“நீங்களே என்னோடு வந்து பாருங்கள், புரியும்.” உடனே சுரமஞ்சரியும் தோழியோடு எழுந்து சென்றாள்.

அங்கே தன்னுடைய மாடத்திலிருந்து வெளியேறிச் செல்லும் வாயிலில் புதிய ஏற்பாடாக இரண்டு யவனக் காவலர்கள் நிற்பதைக் கண்டு திகைப்போடு தோழியின் முகத்தைப் பார்த்தாள் சுரமஞ்சரி.

“அங்கே பார்த்துப் பயனில்லை. என்னுடைய முகத்தைப் பாருங்கள். நான் சொல்கிறேன். உங்களுடைய அலங்கார மண்டபத்தில் நீங்கள் அரும்பெரும் சித்திரங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/142&oldid=1150027" இலிருந்து மீள்விக்கப்பட்டது