உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

438

மணிபல்லவம்

கொண்டு போய் விடலாகாதே என்ற பயம் அவனுக்கு இருந்தது. பருகி விடுவது போன்ற தாகத்தோடு தன் நீலோத்பல விழிகளை- அம்புகளின் கூர்மையுடையனவாக்கிக் கொண்டு முல்லை பார்த்த பார்வையை நினைத்துக் கொண்டான் இளங்குமரன். அந்தக் கண்களின் வனப்புக்குத் தான் அளித்த காணிக்கையான கவிதையையும் நினைத்துக் கொண்டான்.

இயல்பாகவே எழும் பாசங்களைப் போக்கிக் கொள்வதென்பது தேர்ந்த மனித மனத்துக்கும் அரியது என்று அன்றைக்கு அவன் உணர்ந்தான். ‘நெல்லுக்குள் உமியும், செம்பிற் களிம்பும்போலப் பாசங்கள் மனத்துடனேயே பிறந்தவை’- என்று அவன் கற்றிருந்ததன் அநுபவம் அவனுக்கே விளங்கிற்று. முல்லை வந்து எதிரே கண் கலங்கி நின்றிராவிட்டால் காவிரிப்பூம் பட்டினமும் பழைய சார்புகளும் அவனுடைய நினைவில் வந்திருக்கப் போவதில்லை. பாடல் எழுதப்பெற்ற அந்த ஏட்டையும், நாகலிங்கப் பூவையும் முல்லையின் கையில் கொடுக்கும் போது பேதைச் சிறு பெண்ணாய் அவள் தன் முன்னால் சிரித்துக் கொண்டு நின்ற பழைய நாட்கள் எல்லாம் நினைவு வந்து அவனையே மனம் நெகிழ்ந்து உருகும்படி செய்து விட்டன. அடுத்த நாள் பொழுது புலரும் வரை அவன் தன் மனத்தில் அவளை மறக்க முயன்று கொண்டே நினைத்துக் கொண்டிருந்தான். பொழுது புலர்ந்தபின் நீராடித் தூய்மை பெற்றுப் பாடம் கேட்பதற்காக அடிகளின் கிரந்த சாலைக்குள் அவன் நுழைந்த போது விசாகை பளீரென்று மின்னும் புதிய சிவர ஆடை புனைந்து கையில் அட்சய பாத்திரமும் ஏந்தியவளாய் எங்கோ புறப்பட்டுக் கொண்டிருந்தாள். நிர்மலமான புனிதப் பூ ஒன்று பொன் நிறத்தில் பூமியையே காம்பாகக் தோன்றினாள். அவள் எங்கேயோ யாத்திரை போகிறாள் போலத் தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/144&oldid=1150029" இலிருந்து மீள்விக்கப்பட்டது