நா. பார்த்தசாரதி
441
இப்போது கொடி போன்று இளைத்து வெளுத்திருப்பதையும், ஆனால் அந்தக் காலத்தில் ஞானபலமில்லாமல் இளைத்ததாயிருந்த தன் மனம் இப்போது அந்த வலிமையினைப் பெற்றுப் பெருத்து வருவதையும் சேர்த்து நினைத்தான் இவன்.
இனிமேல் கண் பார்வையில் ஒளியினாலும் இதயத்தின் ஆழத்திலிருந்து பிறக்கும் கனிந்த சொற்களாலும் ஆன்மாவின் பலத்தினாலுமே இந்த உலகத்தில் எதையும் வெற்றி கொண்டு நிற்க முடியும்போல் ஒரு நம்பிக்கை அவனுக்கு உண்டாயிற்று. அவன் மனத்திற்குள்ளே தொடங்கிய இந்த ஞான யாத்திரையில் பல மாதங்கள் கழிந்து போயிருந்த போதிலும் ‘கற்றது குறைவே’ என்னும் உணர்வினால் கழிந்த காலம் எல்லாம் மிகச் சில நாட்களைப் போலவே அவனுக்குத் தோன்றின. ஐந்திரம், பாணினியம், தொல்காப்பியம் போன்ற இலக்கணக் கடல்களில் நீந்துவதற்குக் கழிந்த காலமும் தருக்கத்திற்காக வேத வியாசரின் பத்து அளவைகளையும் கிருத கோடியின் எட்டு அளவைகளையும் சைமினியின் ஆறு அளவைகளையும் ஆழ்ந்து கற்ற காலமும், தெய்வத் திருநாட்களாக அவன் வாழ்வில் வந்தவை பெளத்தர்களின் திரிபிடக நெறியையும் பிற கருத்துக்களையும் அவன் கற்ற காலத்தில் விசாகை அவனுக்குப் பெருந்துணையாக இருந்தாள். வேதநெறிக்கு உட்பட்ட ஐந்துவகைச் சமயங்களின் வாதங்களையும், வேதநெறிக்குப் புறம்பான ஐந்துவகைச் சமயங்களின் வாதங்களையும், அவன் ஞானக்கடலாகிய நாங்கூர் அடிகளாரிடம் கற்று அறிந்து தெளிந்த காலம் மறக்க முடியாத பொற் காலமாயிருந்தது. இப்படிக் கழிந்த தெய்வ நாட்களினிடையே காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து நீலநாக மறவரும் வீரசோழிய வளநாடுடையாரும் அடிக்கடி திருநாங்கூருக்கு வந்து இளங்குமரனைச் சந்தித்துவிட்டுச் சென்றார்கள். விசாகை இடையிடையே யாத்திரை செல்வதும் மீண்டும் திருநாங்கூருக்கு வந்து தங்குவதுமாக