பக்கம்:மணி பல்லவம் 2.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

448

மணிபல்லவம்

அவனிடமிருந்து பதில் இல்லை; பார்வையும் இல்லை. இளங்குமரன் கீழே குனிந்தவாறு இருந்தான். அடிகள் அருகில் வந்து அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். அவன் மெளனமாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்ததைக் கண்டார்.

“நீ எதற்காக அழுகிறாய்?”

“சுவாமி! நான் உங்களுடைய பேரறிவுக்கு முன்னால் அற்பமானவன். சுகதுக்கங்களினால் சிறிதும் சலிப்படையாமல் உபசாந்திநிலை பெற்றவராகிய நீங்களே எனக்கு விடை கொடுக்கக் கண் கலங்குகிறீர்கள். உங்களைப் போன்ற ஞான தேசிகரைப் பிரிந்து புறப்படும் நான் அழாமல் தாங்கிக் கொள்ள இயலுமா? இதுவரை நான் கற்றதெல்லாம் இதற்கு முன்பு கல்லாதிருந்த காலத்து அறியாமையின் அளவைத் தெரிந்து கொள்ளும் அளவு தான். அற்பனாகிய எளியேனுடைய பிரிவு உங்களைக் கண்கலங்கச் செய்யுமானால் அடியேன் நிறையப் பாவம் செய்தவனாக இருக்க வேண்டும்.”

இளைத்த உடல் நடுங்கிட எழுந்து நின்ற இளங்குமரன் அழுது கொண்டே அடிகளுடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கி அவற்றைப் பற்றிக் கொண்டான். அவனுக்குத் தெரியாமல் தம்முடைய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவனுடைய கண்ணீரைத் துடைப்பதற்காக அவனை எழுப்பி நிறுத்தித் தோளோடு தோள் தழுவிக் கொண்டார் அந்தப் பெரியவர். கலங்கியறியாத அவர் மனமும் அன்று கலங்கியிருந்தது.

ஞானக் கடலும் ஞான ஆறும் கலப்பது போன்ற இந்தத் தூய்மையான ஞான சங்கமத்தைப் பார்க்கக் கூசியவனைப்போல் என்றும் களங்கமுடைய சந்திரன் தன்னை மேகத்தில் மறைத்துக் கொண்டான். தன்னுடைய ஆணவம் மெய்யாகவே அழிந்துவிட்டதா, இல்லையா என்பதைச் சோதிப்பதற்காகவே அடிகள் இந்தக் கடைசி நாளில் இப்படி விநயமாகப் பழகுகிறாரோ என்று இளங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/154&oldid=1150040" இலிருந்து மீள்விக்கப்பட்டது