நா. பார்த்தசாரதி
317
துக்குப் போய் அங்கேயிருந்த இளங்குமரனின் சித்திரத்தை எடுத்துக் கொண்டு வந்து சீனத்துக் கப்பல் தலைவனிடம் காண்பித்தார் நகைவேழம்பர். கப்பல் தலைவனின் முகம் அந்தச் சித்திரத்தைக் கண்டதுமே மலர்ந்தது.
“இதே இளைஞன்தான். இதே அழகிய கண்கள்தான். எனக்கு மிக நன்றாக நினைவிருக்கிறது.”
இதைக் கேட்டவுடன் சுரமஞ்சரியின் தந்தைக்கு அடங்காத சினம் மூண்டது. பெண் உயிர் பிழைத்து வந்தாளே; அதே போதும் என்று காலையில் உண்டாகியிருந்த மகிழ்ச்சிகூட இப்போது ஏற்பட்ட இந்தச் சினத்தில் ஒடுங்கிவிட்டது. அந்நியனான அந்தக் கப்பல் தலைவனுக்கு முன் தம் குடிப் பெருமையை விட்டுக் கொடுக்கலாகாதே என்ற நினைவு மட்டும் தடுத்திராவிட்டால் அவர் இன்னும் கடுமையாக உணர்ச்சிவசப்பட்டிருப்பார்.
சீனத்துக் கப்பல் தலைவன் அவர் நிலையைக் கண்டு ஒன்றும் புரியாமல் மருண்டான். ‘பெண்ணைக் காப்பாற்றியதற்காக அவள் பெற்றோர் தனக்கு நன்றி சொல்லப் போவதாய்ப் கூறியல்லவா இந்த ஒற்றைக் கண் மனிதர் நம்மை அழைத்து வந்தார்; நடப்பதென்னவோ வேறு விதமாக இருக்கிறதே’ என்று எண்ணி வியந்தான் அவன்.
‘சுரமஞ்சரி நீராட்டு விழாவில் நீந்துவதுபோல் தப்பிச் சென்று முன்பே இளங்குமரனைப் படகுடன் ஆற்றில் காத்திருக்கச் செய்து அவனுடன் புறப்பட்டுப் போயிருப்பாளோ?’ என்று தன் மனம் எண்ணிப் பழகிய கெட்ட வழியிலேயே எண்ணினார் நகைவேழம்பர். அதைச் சுரமஞ்சரியின் தந்தையிடம் காதருகில் சென்று மெல்லக் கூறினார். தன்னை வரவழைத்து உட்கார வைத்துக் கொண்டு அவர்கள் இருவரும் தங்களுக்குள்ளேயே ஏதோ பேசிக் கொள்வதும், எதற்காகவோ கோபப்படுவதும் கண்டு சீனத்துக்கப்பல் தலைவன் வருந்தினான். அவர்கள் பண்புக் குறைவாக நடந்து கொள்வதாகத் தோன்றியது அவனுக்கு. இனிமேலும் தான் அங்கே இருப்பதில் பயனில்லை என்ற எண்ணத்துடன் மெல்ல எழுந்து