பக்கம்:மணி பல்லவம் 2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324

மணிபல்லவம்

என்னிடமிருந்த இந்த ஒரே ஒருநாள் போதுக்குள் ஏதோ ஒரு வலிமை குறைந்திருக்கிறதே! அது எங்கே குறைந்தது? யார் முன்னிலையில் குறைந்தது? விதையிடுவதற்கு உழுது வைத்த நிலம்போல் என் மனம் எதை எதிர்பார்த்து இப்படி இறுக்கம் நெகிழ்ந்து குழைந்து போயிருக்கிறது? என்ற நினைவுகளுடன் கையில் சுவடியேந்தியபடி தயங்கி நின்றான் இளங்குமரன். சற்றே நிதானமாக எண்ணிப் பார்த்தபோது தானும் தன் உணர்வுகளும் இளைத்த இடம் அவனுக்கு மீண்டும் நினைவு வந்தது.

“மறுபடியும் எப்போதாவது என்னிடம் கேள்வி கேட்க வந்தால் மனம் நிறைய ஞானத்தோடு வலது கையில் சமயவாதம் புரிவதற்கான கொடியை உய்ர்த்திப் பிடித்துக் கொண்டு ஞான வீரனாக வந்து சேர்! மற்போர் வீரனைப் போல் உடம்பை மட்டும் வலிதாகக் காண்பித்துக் கொண்டு வந்து நிற்காதே!” என்று உலக அறவியின் வாயிலில் அந்தப் பெளத்த சமயத் துறவி சிரித்துக் கொண்டே கூறினாரே, அவர் அப்படிக் கூறியதைக் கேட்டு, தான் தலைகுனிந்து நின்ற அந்தக் கணமே தன் வலிமையும் தானும் இளைத்துப்போய் விட்டதுபோன்று ஒரு பிரமையை இளங்குமரன் உணர்ந்திருந்தான். அவனுடைய தயக்கத்தை அடிகள் கவனித்தார்.

“எதை நினைத்துத் தயங்குகிறாய், இளங்குமரா? உன் கைகள் ஏன் இப்படி நடுங்குகின்றன? இந்தச் சுவடி அவ்வளவு பெரிய சுமையல்லவே?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் நாங்கூர் அடிகள்.

“அறிவின் உலகமாகிய இந்தச் சுவடிகளையெல்லாம் பார்க்கும்போது இவற்றின் அருகே நான் மிகவும் இளைத்துப்போய்த் தளர்ந்து விட்டாற்போல் எனக்குத் தோன்றுகிறது ஐயா!”

“உடம்பிற்கு அப்பாற்பட்டதாய், உடம்பைக் காட்டிலும் வலியதாய் உள்ள உணர்வுகளுக்கு அருகில் நிற்கிற போது உடம்பு சிறியதாய்த் தோன்றுவது இயல்பு தான். அப்படிப்பட்ட சமயங்களில் மனத்தைப் பெரிதாக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/30&oldid=1149320" இலிருந்து மீள்விக்கப்பட்டது