உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

மணிபல்லவம்

துருவத்திலிருந்து சொற்கள் பிறந்தன. சொற்கள் பொருள்களை அடைந்தன. பல பொருள்களை அடைந்த ஒரு சொல்லும் ஒரே பொருளை அடைந்த பல சொற்களுமாக மொழி நிலத்திற் பதங்கள் விளைந்தன. ஒற்றைத் தனி மலர்போல் ஒரெழுத்தில் விளைந்த சொற்களும் தொடுத்த மலர்கள்போல் பல எழுத்துக்களிணைந்து விளைந்த சொற்களுமாக மொழி வளர்ந்தது. சொல் செவிக்குப் புலனாகும்போது ஒலி வடிவில் இலங்குகிறது. கண்ணுக்குப் புலனாகும்போது எழுத்து வடிவில் இலங்குகிறது. பூ என்ற தோற்றமும், மணம் என்ற உணர்வும், தனித்தனி நிலைகளாயினும் இரண்டும் ஒன்றிலிருந்து எழுகிற உணர்வுகள் அல்லவா? அதுபோல் சொல்லும் பொருளும், வேறு வேறு உணர்வுகளாயினும் மலர் மணம் போல் சொற் பொருளுணர்ச்சி ஓரிடத்திலிருந்து எழுவதே...”

“சொற்பொருளுணர்ச்சி என்பது என்ன ஐயா?” என்று இளங்குமரன் ஆர்வத்தோடு அவரிடம் குறுக்கிட்டுக் கேட்டான்.

“இன்ன சொல்லால் இன்ன பொருள்தான் உணரப்படும் எனப் பழகிய வழக்குக்குச் சொற்பொருளுணர்வு என்று பெயர். பாம்பு என்ற சொல்லைக் கூறினால் உடனே பாம்பு என்னும் பொருளும், பாம்பு என்ற பொருளைப் பார்த்தால் உடனே பாம்பு என்ற சொல்லும் இடையீடு இன்றி ஒருங்கே நினைவு வருகிறதல்லவா? உலகத்து மொழிகளில் எல்லாம் உணர்த்தப்படும் பொருள்களிடையே வேறுபாடு உண்டு. இனிமை என்கிற உணர்வு புல்லாங்குழல், யாழ் முதலிய எல்லா இசை வகைக்கும் பொதுவாவது போல் பொருளுணர்த்துதல் என்பது எல்லா மொழிச்சொற்களுக்கும் பொதுவான குறிக்கோள். ஒன்றாகிய பரம்பொருளை ஒவ்வொரு சமயமும் வேறு மார்க்கங்களில் வந்து முடிவு காண முயல்வதுபோல் ஒரே பொருளை வேறு வேறு சொற்களால் உணர்த்துவது மொழிகளின் மதம். மொழியுணர்வை ஒட்டிச் சமய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/32&oldid=1149322" இலிருந்து மீள்விக்கப்பட்டது