328
மணிபல்லவம்
கொள்ள வழி தெரியாவிட்டாலும் காலத்தின் தலையெழுத்தைப் புறங்காணும் காவியங்களையும், இலக்கிய இலக்கணங்களையும் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். எவ்வளவு விந்தையான உலகம் இது? தெய்வம் விதியை வகுத்து எழுதிப் படைத்தது. மனிதர்கள் எழுதிப் படைத்த விதி வகுத்திருக்கிறார்கள். சொல்லையும் பொருளையும் போல் சக்தியும் சிவமுமாய் இணைந்திருக்கும் சொற் பொருட் காரணனான பெருமானைச் சொல்லும் பொருளுமாக இணைத்துப் பாவித்துச் சொற் பொருளால் வணங்குகிறேன்” என்று பரம்பொருளை வணங்குகிற அளவுக்குப் பெருமை படைத்திருக்கிறார்கள். மண்ணுலகத்துக்கு மொழி படைத்துக் கொடுத்த மனிதர்கள், தாங்கள் வகுத்த விதிக்கு இலக்கணம் என்ற பெயரும் சூட்டியிருக்கிறார்கள். விதியின் எழுத்துக்கு வடிவம் தெரியவில்லை, பொருளும் தெரியவில்லை. மனிதர்கள் படைத்த எழுத்துக்கு வடிவும் பொருளும் வகையும் எல்லாம் இருக்கிறது அல்லவா?”
இளங்குமரன் ஆவல் மீதுாரக் கேட்டுக் கொண்டிருந்தான். அப்போது அவர்கள் இருவரும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த கிரந்தசாலையின் வாயிற் பக்கமிருந்து “தாத்தா! நான் உள்ளே வரலாமா?” என்று பெண் குரல் ஒன்று வினாவியது.
“யார்? விசாகையா? வா, அம்மா! இரண்டு மூன்று நாட்களாக உன்னை இந்தப் பக்கமே காணவில்லையே; எங்கே போயிருந்தாய்?” என்று அடிகள் அந்தக் குரலுக்குரியவளை வரவேற்றுக் கூறிக்கொண்டே வாயிற்பக்கம் திரும்பினார்.
தலையில் நிறுத்திய சங்குபோல் எடுத்துக் கட்டிய சடைமுடியும், எளிய தோற்றமும் அட்சய பாத்திரம் ஏந்திய கைகளுமாக மேக மண்டலத்திலிருந்து தூய்மையே வடிவாய் இறங்கிவரும் மின்னல் போல் உள்ளே நுழைந்தாள் துறவுக்கோலம் பூண்ட புத்த சமயப் பெண் ஒருத்தி, அழல்கொண்டு செய்தாற் போன்ற நிறமும், துறவுக்