உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

331

யின் எல்லையில் இருப்பதாகவே தெரியவில்லை. ஓவியன் சொல்லாமற் கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறி எங்காவது ஓடிப்போயிருக்க வேண்டும் அல்லது நகைவேழம்பருடைய குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியேற முடியாமல் சிறை வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

நகைவேழம்பருடைய கட்டுக்காவலில் அவன் இருக்கிறானா? இல்லையா என்பதை அறிந்து கொள்வது அவ்வளவு எளிய காரியமில்லை என்பதை வசந்தமாலை உணர்ந்திருந்தாள். அந்த மாளிகையின் எல்லைக்குள் நகைவேழம்பர் இருக்கும்போது அவருடைய பகுதிக்குள் நுழைந்து ஓவியனைத் தேடுவதென்பது இயலாத காரியம். அவர் இல்லாத நேரங்களிலும் காவல் உண்டு. நகைவேழம்பரின் மனத்தைப் போலவே அவருடைய குடியிருப்பு மாளிகையில் பாழடைந்த பகுதிகளும், இருண்ட கூடங்களும் அதிகமாக இருந்தன.

தன் தலைவியிடமிருந்து இளங்குமரனுக்கு மடல் வாங்கிக் கொண்டுபோன நாளுக்குப்பின் ஓவியன் மணிமார்பனைத் தானும் தன் தலைவியும் மீண்டும் சந்திக்கவே இல்லை என்பதை நினைத்தபோது வசந்தமாலைக்குப் பலவிதமான சந்தேகங்கள் உண்டாயின. ‘அந்த மடலைக் கொண்டு போனபின் அவன் திரும்பி வராமலே ஓடியிருக்கலாமோ’ என்று எண்ண இடமில்லை. ஏனென்றால், அந்த மடல் நகைவேழம்பர் கையில் சிக்கியிருக்கிறது. மடலோடு அதைக் கொண்டு சென்றவனும் அகப்பட்டிருக்கத்தான் வேண்டும். முடிவாக ஓவியன் மாளிகையிலிருந்து வெளியேறிச் சென்றிருக்க முடியாது என்ற உறுதியே வசந்தமாலையின் உள்ளத்தில் வளர்ந்தது. பெருமாளிகைத் தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்த நகைவேழம்பரின் பகுதியை அவள் அடைந்தபோது, அது இருளில் மூழ்கியிருந்தது. அதன் பெரிய கூடத்தில் “சிறிய தீபம்” ஒன்று காற்றுடன் போராடிக் கொண்டிருந்தது. வாயிற்புறம் ஒரு காவலன் உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தான். நகைவேழம்பர் எங்கோ வெளியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/37&oldid=1149327" இலிருந்து மீள்விக்கப்பட்டது