பக்கம்:மணி பல்லவம் 2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

335

நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் வரைந்தளித்த ஓவியம் அழியாச் சித்திரமாக எனது ஓவியச்சாலையில் எக்காலத்தும் இருக்கும் என்று கனவு கண்டேன். இன்று பிற்பகல் நான் கனவு கண்டு கொண்டிருந்ததற்கு நேர்மாறான விதத்தில் பயன்படுவதற்காக அந்த ஓவியம் பறிபோய் விட்டது. அந்த ஒவியத்திலுள்ள மனிதரைத் துன்புறுத்திச் சிறை பிடித்துக் கொண்டு வருவதற்காக அதையே அடையாளமாகக் கொடுத்தனுப்பியிருக்கிறார்கள். எப்பாடுபட்டாயினும் அதைத் தவிர்த்து அந்த மனிதருக்குக் கெடுதல் நேராமல் தடுப்பதற்கு உங்கள் உதவியை நாடவேண்டியவளாக இருக்கிறேன் ஓவியரே!”

சுரமஞ்சரி கூறிய இந்தச் செய்தியைக் கேட்டு மணிமார்பன் திடுக்கிட்டான். ஆனாலும் சிறைபட்டு அடங்குகிற அளவுக்கு இளங்குமரன் வலிமையற்ற வனில்லை என்ற உறுதியான நம்பிக்கை அவனைப் பதற்றமடைவதிலிருந்து தவிர்த்தது.

“ஓவியத்தை இங்கிருந்து எடுத்துக் கொண்டு போய் விட்டார்களே என்பதற்காக வேண்டுமானால் நீங்கள் கவலைப்படலாம் அம்மா! ஆனால் அதை வைத்து அவரைத் தேடிப் பிடித்து துன்புறுத்துவார்களோ என்று நினைத்துக் கவலைப்படுவதற்கு அவசியமில்லை! சிறைப்பட்டு அடங்குகிற வலிமைக் குறைவுள்ள மனிதரில்லை அவர். தேடிப் போகிறவர்கள் அவரிடம் சிறைப்படாமல் மீண்டு வந்தால் போதும்! வலிமையான சூழ்நிலையில் வலிமை வாய்ந்த மனிதர்களுக்கிடையே வலிமையோடு தான் இருக்கிறார் அவர்” என்று ஓவியன் சமாதானம் கூறிய பின்னும் சுரமஞ்சரி நிம்மதியடையவில்லை.

“ஐயா, ஓவியரே! என்னை உங்கள் சகோதரியாக எண்ணி மறுக்காமல் எனக்கு இந்த உதவியைச் செய்யுங்கள். அவர் எங்கிருந்தாலும் உடனே சந்தித்து இதைக் கூறி முன்னெச்சரிக்கை செய்தபின் நீங்கள் உங்கள் விருப்பம்போல் எங்கு வேண்டுமானாலும் போகலாம். கொடுமைக்காரர்கள் நிறைந்த இந்த மாளிகைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/41&oldid=1149347" இலிருந்து மீள்விக்கப்பட்டது