336
மணிபல்லவம்
மறுபடியும் திரும்பி வரவேண்டுமென்ற அவசியம்கூட இல்லை. வெளியேறிப் போகிற போக்கில் எனக்காக நீங்கள் இந்த உதவியைச் செய்துதானாக வேண்டும்.”
“நீங்கள் என்னவோ அந்த மனிதருக்காக உயிரையே விடுகிறீர்கள். உங்களைப் பொறுத்த வரையில் அந்த மனிதர் நெகிழ்ச்சியே இல்லாத கல்லாயிருக்கிறாரே அம்மா. அன்றைக்கு அந்த மடலை ஏற்றுக் கொள்ளாமல் என்னைத் திருப்பியனுப்பி அவமானப்படுத்தியது போதாதென்று இன்றைக்கு இன்னொரு முறையும் அவரிடம் போய் அவமானப்படச் சொல்கிறீர்களே?” என்று அதுவரை சொல்வதற்குத் தயங்கிக் கூசியதை அவளிடம் மனம் விட்டுச் சொன்னான் ஓவியன்.
இதைக் கேட்டுச் சுரமஞ்சரி ஓவியனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். ஒரு கணம் சுட்டெரித்து விடுவது போலிருந்தது அந்தப் பார்வை. மறுகணம் நிதானமாய் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கூறலானாள்:
“அவர் என்னை மதிக்காமல் இருக்கிறார் என்பதற்காக நானும் அவரை மதிக்காமலிருக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பது தவறு. ஓவியரே! அவர் என்னிடமிருந்து விலக விலக நான் அவருடைய அண்மையை நாடித் தவிக்கிறேன். இன்னதென்று உங்களுக்குச் சொல்லி விளக்க முடியாததொரு நுண்ணிய உணர்வு இது!.. இதைப் பற்றி மேலும் என்னிடம் தூண்டிக் கேட்காமல் நான் உங்களிடம் கோரும் உதவியைச் செய்ய முடியுமா, இல்லையா என்பதற்கு மட்டும் மறுமொழி கூறுங்கள்.”
அந்த அன்புப் பிடிவாதத்தைக் கேட்டு ஓவியன் திகைத்துப் போனான். என்ன பதில் கூறுவதென்று தோன்றாமல் தயங்கினான் அவன், அவளுடைய பார்வை அவனைக் கெஞ்சியது.
“நீங்கள் கூறியபடி அவரைச் சந்தித்து இந்தச் செய்தியைக் கூறி எச்சரிக்கை செய்கிறேன் அம்மா!