உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

339

துன்பங்களின் கோட்டையிலிருந்து விடுதலையடைந்து வந்துவிட்டாற் போன்ற மகிழ்ச்சி நிறைந்திருந்தது. வீதியின் இருபுறமும் இரவின் அழகுகள் விவரிக்க இயலாத சோபையுடன் திகழ்ந்தன. இரவு கண் விழித்துப் பார்ப்பது போல் எங்கு நோக்கினும் விளக்கொளிகள் தோன்றின. மாளிகையின் முன்புறங்களில் படர்ந்திருந்த இல்வளர் முல்லை என்னும் வகையைச் சேர்ந்த முல்லைக் கொடியில் பூக்கள் பூத்துக் குலுங்கி வீதியில் வீசிய காற்றையே மணக்கச் செய்து கொண்டிருந்தன.

மணிமார்பனுக்கு மணங்களிலிருந்து எண்ணங்கள் பிறந்தன. எண்ணங்களிலிருந்து புதிய எண்ணங்கள் கிளைத்தன. மணங்களைத் தூண்டுதலாகக் கொண்டு பிறந்த எண்ணங்களும் எண்ணங்களைத் தூண்டுதலாகக் கொண்டு பிறந்த வாசனைகளும் மணந்தன. நெஞ்சிலும், உடம்பிலும் வாழ்க்கையைப் பற்றிய துணிவுகளும், நம்பிக்கையும் அப்போதுதான் புதியனவாகப் பிறப்பது போல் தோன்றின. மணங்கள், இனிய இசைகள், குளிர் காற்று- இவற்றின் அருகில் இவற்றை உணரும்போது ‘வாழ்க்கையில் மகிழ்வதற்கு ஏதோ இருக்கிறது, எங்கோ இருக்கிறது- அதைத் தேடு!’ என்பது போல் ஒரு நம்பிக்கை உணர்ச்சியை மணிமார்பன் பலமுறை அடைந்திருக்கிறான். மடியில் முடிந்து வைத்துக் கொண்டிருந்த மணி மாலையைப் பற்றி நினைத்து மகிழ்ந்தான் அவன். சிறிது நேரத்துக்கு முன்பு அந்த மாளிகையிலிருந்து அவன் வெளியேறியபோது சுரமஞ்சரி அவனுக்கு மனம் விரும்பிக் கொடுத்த பரிசு அல்லவா அது? அவ்வளவு பெரிய பரிசை அவளிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை அவன். தான் அந்த மணிமாலையை வாங்கிக் கொள்வதற்குத் தயங்கிய போது அவள் கூறிய வார்த்தைகளை மறுபடியும் நினைத்துக் கொண்டான் அவன். தகுதி என்பது கொடுக்கிறவர்களுக்கு இருந்தால் போதும். வாங்கிக் கொள்கிறவர்களுக்கு மறுக்காமல் வாங்கிக்கொள்வதுதான் பெரிய தகுதி என்று கூறினாளே அவள்! செல்வர்கள் வார்த்தை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/45&oldid=1149357" இலிருந்து மீள்விக்கப்பட்டது