உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340

மணிபல்லவம்

களைகூடப் பெருந்தன்மையாகச் செலவழிக்கிறார்களே —என்று அவர்களுடைய வார்த்தைகளை எண்ணிய போது அவனுக்கு ஒரு வியப்பு உண்டாயிற்று.

சுரமஞ்சரி மணிமாலை அளித்ததில் எவ்வளவு பெருந்தன்மை இருந்ததோ, அவ்வளவுக்குச் சிறிதும் குறையாத பெருந்தன்மை அவள் அதை அளிக்கும்போது கூறிய வார்த்தைகளிலும் இருந்ததை அவன் உணர்ந்தான்.

‘அடடா! மனத்துக்குப் பற்றுதல் இல்லாத சூழ் நிலையிலிருந்தும், ஒட்டுதல் இல்லாத உறவுகளிலிருந்தும், விடுபட்டு வெளியேறிச் செல்வது எத்துணை மகிழ்ச்சியாயிருக்கிறது. இங்கே அமரலாமோ, அங்கே நிற்கலாமோ, கூடாதோ என்றெல்லாம் பெருஞ்செல்வர் இல்லத்தில் கூசிக் கொண்டே பழகும் வறுமையாளனாக நான் இனி வாடித் தவிக்க வேண்டியதில்லை. நாளையிலிருந்து என்னுடைய நல்ல காலம் தொடங்குகிறது. மீண்டும் இனிமேல் இந்தப் பட்டினப்பாக்கத்து மாளிகைக்குத் திரும்பி வரவேண்டிய தீவினை எனக்கு இல்லை. இதோ என் மடியிலிருக்கும் இந்த மணிமாலையை விற்றால் கவலையில்லாமல் வாழ்க்கை நடத்துவதற்குப் போதுமான பொற்கழஞ்சுகள் கிடைத்துவிடும். நானும் என்னுடைய ஓவியக்கலையும் வளர்ந்து பெருகி வாழலாம். ஆனால், அதற்கு முன் இன்னும் ஒரே ஒரு துன்பம் எனக்கு இருக்கிறது. சுரமஞ்சரிதேவியின் மெல்லிய உள்ளத்தைக் கவர்ந்த அந்த முரட்டு மனிதரைச் சந்தித்து அவள் கூறியவற்றைச் சொல்லி, எச்சரிக்கை செய்துவிட்டுப் போக வேண்டும். அந்த மனிதரைச் சந்திக்க இரண்டாம் முறையாக அவமானப்பட நேர்ந்தாலும் பட்டுக்கொள்ள வேண்டியதுதான். அந்த மனிதரிடமிருந்து அடைகிற கடைசி அவமானமாக இருக்கட்டும் இது’ என்று இவ்வாறெல்லாம் எண்ணிக்கொண்டே வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தான் மணிமார்பன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/46&oldid=1149359" இலிருந்து மீள்விக்கப்பட்டது