உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

343

வந்துபோவதனால் பல நாட்டு வணிகரும் நிறைந்து வாணிகமும் செழிப்பும் சிறப்புமாக நடைபெற்று வாழவும், பொருள் சேர்க்கவும் வழிகள் அதிகமாகயிருந்தன. அதை நினைத்துக் கொண்டுதான் மணிமார்பன் அந்த நகரத்துக்கு வந்திருந்தான். ஆனால் அவன் அங்கு வந்ததிலிருந்து நடந்த நிகழ்ச்சிகள் என்னவோ வேறுவிதமாக அமைந்து விட்டன. ‘உடும்பைப் பிடிக்க வேண்டாம். உடும்புப் பிடியிலிருந்து கைகளை விடுவித்துக் கொண்டு ஓடினால் போதும்’ என்ற மனநிலையை அடைந்துவிட்டான் அவன்.

எதிரே நாளங்காடிப் பூதங்கள் இரண்டும் பாசக் கயிற்றையும், கதாயுதத்தையும் ஓங்கிக் கொண்டு இருளில் பயங்கரமாகக் காட்சியளித்தன. "பொய்த் தவவேடம் பூண்டோர், நிறையிலாப் பெண்மணிகள், கீழ்மைக் குணமுள்ள அமைச்சர்கள், ஒழுக்கமற்ற ஆடவர்கள், பொய்ச் சாட்சி சொல்வோர், புறம் பேசுவோர் இவர்களையெல்லாம் எங்கள் பாசக் கயிற்றால் பற்றிப் புடைத்து உண்போம் என்று நள்ளிரவு நேரங்களில் நான்குகாத தூரம் கேட்கும்படி இடிக் குரலில் அப் பூதங்கள் முழக்கம் இடுவதாகப் புனைந்து கூறிப் பொல்லாத குழந்தைகளைப் பெற்றோர் அடக்குவது வழக்கம். அந்த நகரில் குழந்தைகளைப் பயமுறுத்தும் வழக்கம் இதுதான்.

“இந்தப் பாவி மனிதர் நகைவேழம்பர் எத்தனையோ முறை நள்ளிரவு நேரங்களில் தனியாக இதே வழியாக வருகிறாரே. பூதசதுக்கத்துப் பூதங்கள் இன்னும் இவரைப் புடைத்து உண்ணாமல் ஏன் விட்டு வைத்திருக்கின்றனவோ?” என்று கொதிப்போடு எண்ணினான். அவன். பொற் கடைக்குப் போய் மணிமாலையை விற்பதற்கு முன்னால் யாரும் காணாத தனிமையில் தான் மட்டும் அதை ஒருமுறை நன்றாக நோக்கி மகிழ வேண்டுமென்று விரும்பினான் ஓவியன். ஆனால் மக்கள் புழக்கமும் நெருக்கடியும் நிறைந்த அந்த நாளங்காடிச் சதுக்கத்தில் அவன் எதிர்பார்த்த தனிமை கிடைக்குமென்று தோன்றவில்லை. சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான் மணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/49&oldid=1149364" இலிருந்து மீள்விக்கப்பட்டது