உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

மணிபல்லவம்

கேட்டுவிட்டு மர்மமாகச் சிரித்தார் அவர். அவளும் விடவில்லை. கோபத்தில் சுடச்சுடப் பதிலளித்தாள்:

“பிறருடைய வழிகளில் குறுக்கிடாமல் வாழ்வதற்குச் சிலரால் முடியாது அப்பா !”

“அப்படிப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்பதைத்தானே இப்படிக் குறிப்பாய் மறைத்துச் சொல்ல வருகிறாய்? நல்லது. என் மகள் சாதுரியமாகப் பேசினால் நானும் பெருமை அடைய வேண்டியதுதானே? ஆனால் நீ சொல்வதைச் சிறிது மாற்றிச் சொன்னால்தான் நான் ஒப்புக் கொள்ள முடியும். நான் என்னொருவனுடைய வழியில் இயல்பாக நடந்து போனாலே அது பல பேருடைய வழிகளில் குறுக்கீடாக முடிகிறது. நான் நடந்து போகிற வழியே அத்தகையதென்பதா, அல்லது வேறு விதமான வழியில் நடந்துபோக என்னால் முடியாதென்பதா? எப்படிச் சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை, மகளே!”

“எதற்காகப் பேச்சை வளர்க்கிறீர்கள் அப்பா? இப்போது நாங்கள் வெளியே புறப்பட்டுப் போகலாமா, கூடாதா? அதை முதலில் சொல்லுங்கள்.”

“போகலாம் சுரமஞ்சரி! ஆனால் எங்கே புறப்பட்டுப் போகிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?”

சுரமஞ்சரி இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத் தயங்கினாள். தந்தையார் அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்துச் சிரித்தார்.

“அதனால் என்ன? எங்கே போகிறாயென்று என்னிடம் சொல்ல வேண்டாம். நீ எங்கே போக வேண்டுமானாலும் போய்விட்டுவா. ஆனால் இந்த இரவு வேளையில் தனியாகப் போக வேண்டாம். இதோ இவனை உங்களோடு துணைக்கு அனுப்புகிறேன்” என்று வாயிற் பக்கம் காவலுக்கு நின்று கொண்டிருந்த ஓர் ஊழியனைக் கூப்பிட்டுத் தேரைச் செலுத்துகிறவனாக அமரச் சொன்னார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/54&oldid=1149622" இலிருந்து மீள்விக்கப்பட்டது