300
மணிபல்லவம்
தொடுப்பதுபோல் கவிதை நயமுள்ள பேச்சும் கண்டு இளங்குமரன் அவருக்கு ஆட்பட்டான். அவர் கேட்டுக்கொண்டாற்போல் தன்னையே அவன் அவருக்குக் கொடுத்துவிட்டான். காவிரிப்பூம் பட்டினத்தில் நேற்றுவரை கழிந்த தன் நாட்கள் அந்த நாட்களோடு தொடர்புடைய மனிதர்கள்- அவர்களுடைய உறவுகள்- எல்லாம் மெல்ல நீங்கி நாங்கூர் அடிகள் என்னும் ஞானக் குழந்தைக்கு வீரவணக்கம் புரியும் மற்றொரு ஞானக் குழந்தையானான் அவன்.
இளங்குமரன் அங்கு வந்து சேர்ந்த மறுநாள் வைகறையின்போது விடிகையிலேயே அவனுடைய புது வாழ்வும் விடிந்தது. பறவைகள் துயில் விழித்துக் குரல் எழுப்பும் பணி புலராத காலை நேரத்தில் நாங்கூர் அடிகள் அவனை எழுப்பினார். அவர் அருகில் வந்து நின்றதுமே அவன் விழித்து எழுந்து விட்டான்.
அந்தப் பெரியவர் அருகில் வந்து நின்றாலே விழிப்பும், எழுச்சியும் தானே உண்டாகும். அவர் நிற்கிற இடத்தில் பச்சைக் கர்ப்பூரமும், பவழமல்லிகையும் சேர்ந்து மணப்பது போல் ஒரு புனித மணம் நிலவும். மூப்பும் தளர்ச்சியும், ஒடுங்கியிருந்த அந்த உடம்புக்கே அத்தனை காந்தியானால் பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் எப்படி விளங்கியிருப்பார் என்று கற்பனை செய்தான் இளங்குமரன்.
விலகும் இருளும், புலரும் ஒளியும் சந்திக்கும் சிற்றஞ் சிறு காலை நேரத்தில் இளங்குமரனை எழுப்பி, “என்னோடு வா!” என்று அழைத்துக் கொண்டு மலர் வனங்களிடையே நடந்து புறப்பட்டார் அவர். இளங்குமரன் அடக்கமாக அவரைப் பின்தொடர்ந்து சென்றான். இரண்டு பக்கங்களிலும் வழியை ஒட்டி மலர்ப் பொழில்களாதலால் காற்றே மண மண்டலமாகி வீசியது. அந்த நேரத்தில் அந்த வழியில் காற்று, பனி, ஆகாயம், பூமி எல்லாமே மணந்தன. பக்கத்துச் சிற்றோடைகளில் நீர்