பெண்மை என்னும் தமிழ்ச் சொல்லுக்கு ‘கண்ணிற் புலனாவதோர் அமைதித் தன்மை’ என்று இளங்குமரன் பலரிடம் பொருள் விளக்கம் கேட்டு அறிந்திருந்தான். இன்று விசாகை என்னும் பெண்ணைப் பார்த்தபோது கேட்டு அறிந்திருந்த அந்தப்பொருளைக் கண்டும் அறிந்தான். கண்களின் பார்வையில், முகத்தின் சாயலில், இதழ்களின் சிரிப்பில் எங்கும் எதிலும் அமைதி திகழ அமர்ந்திருந்தாள் விசாகை.
திருநாங்கூர் அடிகள் இளங்குமரனை நோக்கிப் புன்னகை புரிந்தவாறு கூறலானார்.
“இளங்குமரா! விசாகையின் கதை அழிவற்றது. ‘மனிதர்களால் இவ்வளவுதான் முடியும் என்று வரையறை செய்திருக்கும் அளவுக்கும் அப்பாற்பட்டது. இன்ன காரணத்தினால் இப்படிச் செய்தாள்’ என்று இணைத்து விளக்குவதற்குத் தொடர்பும் அற்றது. அழிவு அற்றதை அழிவைக்கொண்டு, அளவு அற்றதை அளவைக் கொண்டும் தொடர்பு அற்றதைத் தொடர்பைக் கொண்டும் எப்படி விளக்கிச் சொல்ல முடியும்? விசாகையின் வாழ்க்கையிலிருந்து ஒரு புதிய தத்துவமே மலர்ந்திருக்கிறது. பெண்ணில் இவள் ஒரு புதுமை! வாழ்வில் அறம் செய்கிறவர்கள் பலர். ஆனால் வாழ்வையே அறமாகச் செய்கிறவர்கள் விசாகையைப் போல் சிலரினும் சிலர்தான் தோன்றுகிறார்கள்.
இந்தப் பெண் இங்கு வந்து சேர்ந்த முதல் நாளை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி அது. கார்த்திகை மாத நடுப்பகுதி, அடை மழை பெய்து கொண்டிருந்த காலம். தொடர்ந்து வானம் கண்விழிக்கவே இல்லை. ஆறுகளும், வாய்க்கால்களும், குளங்களும் ஓடைகளும் கரை நிமிரப்