பக்கம்:மணி பல்லவம் 2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

355

புனல் நெருங்கிப் பொங்கிப் பாய்ந்து கொண்டிருந்தன. ஊரே நீர்ப்பெருக்கில் மூழ்கியெழுந்ததுபோல் குளிர்ந்து போயிருந்தது. பூக்கள் வாடவில்லை, செடிகள் கொடிகள் துவண்டு சோரவில்லை, கார்காலம் என்னும் தம்முடைய பருவத்தைக் கொண்டாடிக் குலவுவதுபோல் முல்லைப் புதர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன.

இப்போது நான் அமர்ந்து கொண்டிருக்கிற இதே கிரந்த சாலையில் இதே இடத்தில்தான் அன்றும் அமர்ந்து கொண்டிருந்தேன். நாலைந்து மாணவர்கள் என்னைச் சுற்றிலும் இருந்து ஏதோ ஒரு நூலைப் பாடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். வெளியில் மின்னலும் இடியுமாகப் பெருமழை பெய்து கொண்டிருந்தது பாடத்தின் இடையே என்னுடைய மாணவர்களில் ஒருவன், ‘இன்ன செயலை இந்த நேரத்தில் இப்படிச் செய்ய வேண்டும் என்னும் ஊக்கம் மனித மனத்தில் எப்படி எழுகிறது? எப்படி வளர்கிறது? எப்படி நிறைவேறுகிறது?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டு என்னிடமிருந்து விடையை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது கிரந்த சாலையின் வாயிற்புறத்து மறைவிலிருந்து ஒரு பெண் குரல், ‘உலகத்தார்க்குப் பண்பின் வழியே ஊக்கம் நிகழும்’ ஊக்கமாவது செயலைச் செய்வதற்குரிய நினைவைத் தூண்டும் முனைப்பு. ஊக்கத்தின் வழியே இதை இப்படித்தான் செய்ய வேண்டுமென்று துணிகிற ஒழுக்கம் நிகழும். கற்று அடங்கி அமையாத மனத்தில் பண்பு இல்லை. பண்பில்லாத மனத்தில் ஊக்கம் இல்லை. ஊக்கமில்லாத மனத்தில் ஒழுக்கம் இல்லை என்று பதில் கூறியது. உடனே நானும் மாணவர்களும் திகைப்படைந்து எழுந்து போய் வாயிற்புறம் பார்த்தோம். சொட்டச் சொட்ட மழையில் நனைந்தவளாய்ப் பால்வடியும் வதனத்தில் அமைதியே புன்னகையாய்ச் சாயல் காட்டக் கைகளில் அட்சய பாத்திரம் ஏந்திக் கொண்டு துறவுக் கோலத்தில் அந்தப் பெண் நின்றாள். என்னைக் கண்டவுடனே அட்சய பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு வணங்கினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/61&oldid=1149669" இலிருந்து மீள்விக்கப்பட்டது