உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356

மணிபல்லவம்

‘இந்த மழையில் யாராவது பிட்சைக்குப் புறப்படுவார்களா? புறப்பட்டு வந்ததுதான் வந்தாய்; எதற்காக வெளியே நனைந்து கொண்டு நிற்கிறாய்? உள்ளே வரலாமே?’ என்றேன்.

துறவு நெறி மேற்கொண்ட எவளோ ஒரு புத்த சமயப் பெண் பிட்சைக்கு வந்திருக்கிறாள் என்று எண்ணியே நான் அப்படிக் கேட்டேன். இவளுடைய பேதைமை மாறாத இளமையைக் கண்டு இந்தப் பருவத்திலேயே இப்படி ஒரு துறவா என்று எண்ணி வியந்துகொண்டிருந்தது என் மனம். அதற்குள் என்னுடைய மாணவன் ஒருவன் எங்கள் பூம்பொழிலின் மடைப்பள்ளிக்குச் சென்று நெய்யிட்ட வெண்சோறும், சில காய்கனிகளும் கொண்டு வந்து இவளுடைய பிட்சைப் பாத்திரத்தில் இடுவதற்குப் போனான். சிரித்தபடியே தான் அதற்காக வரவில்லை என்று குறிப்பினாற் புலப்படுத்துகிறவளைப் போல் தன்னுடைய பிட்சைப் பாத்திரத்தைப் பின்னும் இழுத்துக் கொண்டு விலகி நின்றாள் இவள்.

“நான் ஏற்க வந்திருக்கிற பிட்சைக்கு நானேதான் பாத்திரம். இது அன்று” என்று சொல்லி அட்சய பாத்திரத்தை ஒதுக்கிவைத்தாள்.

பின்பு தான் மழைக்கு ஒதுங்கினாற்போல் நின்ற இடத்தினருகே வைத்துக் கொண்டிருந்த துணி முடிப்பை அவிழ்த்து அதிலிருந்து இரண்டு மூன்று ஓலைகள் அடங்கிய திருமுகம் ஒன்றை எடுத்து என்னிடம் நீட்டினாள். மனத்தில் இன்னதென்று விளங்காமல் பெருகும் வியப்புடன் இவள் கொடுத்த ஓலையை வாங்கிப் படித்தேன். ஓலை பாலி மொழியில் எழுதப்பட்டிருந்தது. மணிபல்லவத் தீவுக்கு அருகில் சமந்த கூட மலையில் வாழ்ந்து வந்த புத்த தத்தர் என்னும் துறவி அந்த ஓலையை எனக்கு எழுதியிருந்தார். அந்தத் துறவி எனக்கு நெருங்கிய நண்பர். பலமுறை காவிரிப்பூம் பட்டினத்துக்கும், திருநாங்கூருக்கும் வந்து பழகியவர். சமயவாதம் புரியுமிடங்களில் எல்லாம் இருவரும் சந்தித்திருக்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/62&oldid=1149671" இலிருந்து மீள்விக்கப்பட்டது