பக்கம்:மணி பல்லவம் 2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

357

இரண்டொரு சமயங்களில் நானே அவரை வாதத்தில் வென்று [1] ‘நாவலோ நாவல்’ என்று வெற்றி முழக்கமிட்டுக் கூறியிருக்கிறேன். அவர் பாலி மொழியில் எனக்கு எழுதியிருந்த ஒலையில் அந்தப் பெண்ணைப் பற்றிய வரலாற்றைக் கூறி அறிமுகப்படுத்தியிருந்தார். அன்று அவர் எனக்கு எழுதியனுப்பியிருந்தவற்றை அப்படியே தமிழில் இன்று உனக்கு விவரித்துச் சொல்கிறேன் இளங்குமரா!

'முற்றா இளமையும் முதிராப் பருவமுமாக உங்களிடம் வந்து நிற்கும் இந்தப் பெண்ணின் பெயர் விசாகை. உடம்பும் பருவமும், முதிர்ச்சியடையாவிட்டாலும் மனத்தில் முதிர்ச்சியும் செம்மையும் பெற்றவள் இவள். மற்றப் பெண்கள் பாவையும், அம்மானையும் கொண்டு கன்னி மாடங்களில் பிள்ளைப் பருவத்து விளையாட்டுக்களை விளையாடிப் பொழுது போக்கிக் கொண்டிருந்த வயதிலேயே இவள் அறநூல்களையும் ஞானநூல்களையும் தக்க ஆசிரியரிடம் பாடங் கேட்கத் தொடங்கிவிட்டாள். சில செடிகள் முளைக்கும்போதே தமக்குரிய மணத்தை மண்ணுக்கு மேலே பரவச் செய்து கொண்டு முளைக்கும். அதைப்போல், விட்ட குறை தொட்ட குறையை நிறைவு செய்யப் பிறந்தவளோ என்று பெற்றவர்களே மருண்டு அஞ்சும் புண்ணியப் பிழம்பாயிருந்தாள் இவள்.

இவளைப் பெற்றவர்களும், சாதாரணமானவர்கள் அல்லர். சாவகநாட்டுச் சிற்றரசர்களில் சிறந்தவனும், பெருஞ்செல்வத்துக்குரியவனுமாகிய சூடாமணிவர்மனின் ஒரே மகளாக இவள் பிறந்தாள். உலகின் நிலையாமையும், துன்பங்களும் இளம் வயதிலேயே இவள் மனத்தில்


  1. அந்தக் காலத்தில் சமயவாதம் செய்ய விரும்புவோர் ஒரு நாவல் மரக்கிளையை நட்டுப் பிறரை வாதத்துக்கு அழைப்பதும், எதிர்வாதம் புரிய வருவோர் வாதத்தில் வென்றபின்பே அக்கிளையைப் பறித்து எறிய வேண்டுமென்பதும் வழக்கு. வாதத்தில் வென்றவர் நாவலோ நாவல் என வெற்றிக் குரல் முழக்குவதும் உண்டு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/63&oldid=1149672" இலிருந்து மீள்விக்கப்பட்டது