உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணி பல்லவம் 2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358

மணிபல்லவம்

உறைத்துப் பதிந்து விட்டன. மற்றவர்கள் பாக்கியங்களாக நினைத்த அரசபோக ஆடம்பரங்கள் இவளுக்குத் துர்ப்பாக்கியங்களாக உறுத்தின. ‘இவற்றிலிருந்து விடுபட்டுச் செல்! துன்ப விலங்குகளிலிருந்து விடுபட அறியாமல் தவிக்கும் மக்களுக்கெல்லாம் விடுபடும் வழியை விளக்கு’ என்று இவள் மனதில் இடைவிடாத தூண்டுதல் ஒன்று பெருகி வந்தது. நினைவு வராப் பருவத்திலேயே இவள் தன் தாயை இழக்கும்படி நேர்ந்தது.

இவளுடைய ஒப்பிலா அழகையும், அறிவையும் பார்த்து இவள் தந்தை சூடாமணிவர்மன் என்னென்னவோ கனவுகள் கண்டு கொண்டிருந்தான். சுயம்வர ஏற்பாடுகள் நடந்தன. விசாகையின் அழகைக் கேள்விப்பட்டிருந்த இளவரசர்கள். எல்லாரும் சூடாமணிவர்மனின் சுயம்வர மண்டபத்தில் கூடினார்கள். கடல் கடந்த நாடுகளிலிருந்தும் விசாகையின் அழகைக் கேட்டு மயங்கியவர்கள் வந்திருந்தார்கள்.

‘எந்தப் பிறவியிலோ செய்த தவப்பயன் இந்தப் பிறவியில் எனக்கு இப்படி ஒரு பெண்ணாய்ப் பிறந்திருக்கிறது’ என்று சூடாமணிவர்மன் கர்வப்பட்டுக் கொண்டிருந்தான். விசாகையின் சுயம்வர நாள் விழாவைச் சாவகநாடே களிப்புடன் கொண்டாடிப் போற்றிக் கொண்டிருந்தது. அறிவும் திருவும், வனப்பும், செல்வமும் ஒருங்கு வாய்ந்த நாயகன் விசாகைக்கு வாய்க்க வேண்டு மென்று மனத்தில் தெய்வத்தை வேண்டிக்கொண்டிருந்தான் சூடாமணிவர்மன்.

சுயம்வர மண்டபத்துக்கு வெளியே இனிய மங்கல வாத்தியங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. அரண்மனையெங்கும் வாசனை வெள்ளம் பாய்ந்து பரவிக் கொண்டிருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் பொன்னும், முத்தும், மணியும், அரசர் தம் முடிகளும் ஒளிர்ந்தன. பெண்களிற் பேரழகியாக வந்து பிறந்தவளைச் சொந்தமாக்கிக் கொள்ள ஆண்களிற் பேரழகர்களாக வந்து பிறந்தவர்கள் எல்லாம் கூடியிருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/64&oldid=1149675" இலிருந்து மீள்விக்கப்பட்டது