பக்கம்:மணி பல்லவம் 2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

359

தோழிகளும், பணிப் பெண்களும் அழகுக்கே அழகு செய்வதுபோல் விசாகையை அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். விசாகை பொம்மையைப் போல் வீற்றிருந்தாள். பட்டுச் சிற்றாடையும், பவழ மணிமாலைகளும், பொன்னும் பூவுமாகத் தன் உடம்பைச் சிறை செய்து கட்டுவதாகத் தோன்றியது இவளுக்கு. ‘நீ இதற்காகவா பிறந்தாய்?’ என்று உள் மனத்தில் முள் குத்துவதுபோல் ஒரு கேள்வி நீங்க மாட்டாமல் குத்தி உறுத்திக் கொண்டிருந்தது. கோலக் குழல் முடித்துக் குங்குமத் திலகமிட்டு, நீலப் பட்டுடுத்தி, நித்தில மாலையிட்டுப் பணிப் பெண்கள் விசாகையின் தோற்றத்தில் கவர்ச்சியைப் பிறப்பிக்க முயன்று கொண்டிருந்தபோது இவள் கண்களில் நீர் பிறந்தது. நெஞ்சினுள் எதிலிருந்தோ, எதற்காகவோ விடுபட்டுப் பறக்க வேண்டும் போலத் தவிப்புப் பிறந்தது. எப்போதோ, எங்கேயோ, ஏதோ ஒரு செயலை அரை குறையாக விட்டு வந்திருப்பது போலவும், அதை நிறைவு செய்ய எழுந்து போக வேண்டிய நேரம் நெருங்குவது போலவும் உணர்வு பிறந்தது. விசாகையின் பின்புறம் இவள் கூந்தலில் பூச்சூடிக் கொண்டிருந்த பணிப் பெண்கள் எதிரேயிருந்த கண்ணாடியில், மெளனமாகக் கண்ணீர் வடித்தவாறு தெரியும் தங்கள் தலைவியின் முகத்தைக் கண்டு திகைத்தார்கள். மனத்துக்கு விருப்பமான கணவனைத் தேர்ந்தெடுப்பதற்காக மாலையேந்திச் செல்லும்போது யாராவது இப்படி அழுவார்களா? என்று எண்ணிக் காரணம் புரியாமல் அஞ்சினார்கள் பணிப் பெண்கள்.

‘நம் தலைவி அழவில்லையடி, கண்களுக்கு மை தீட்டும்போது அதிகமாகத் தீட்டிவிட்டார்களோ என்னவோ? மை கண்களில் கரித்து உறுத்துகிறது போலிருக்கிறது. அதனால்தான் கண்களிலிருந்து நீர் வடிகிறது’ என்ற காரணத்தை ஆராய்ந்து கண்டவள் போல் சொல்லிச் சிரித்தாள் ஒரு பணிப்பெண். விசாகை ஒன்றும் பேசாமல் சிலையாக அமர்ந்திருந்தாள். பேச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/65&oldid=1149676" இலிருந்து மீள்விக்கப்பட்டது