நா. பார்த்தசாரதி
361
செல்ல வேண்டும்’ என்ற தவிப்பை உணர்ந்தும், உணராமலும் தவித்தபோது விசாகை என்ற உடம்பின் வலிமையை மீறிக்கொண்டு விசாகை என்ற மனத்தின் வலிமை ஓங்கி வளர்ந்து ஆட்கொண்டது. பணிப்பெண்கள் விசாகையை எழுந்திருக்கச் செய்து சுயம்வர மாலையைக் கையில் கொடுத்தார்கள். கண்ணீரைத் துடைப்பதற்காக அருகில் வந்தாள் ஒரு தோழி. அப்போது மறுபடியும் அந்தக் குரல் இவள் உள்ளத்திலிருந்து ஒலித்தது.
‘உன் கண்ணீரைத் துடைத்துக் கொள்வதற்கு முன் உலகத்தின் கண்ணிரைத் துடைக்க வேண்டாமா அம்மா? இன்று அபூர்வமாக நீ அழும் இதே அழுகையை ஏற்கெனவே பலர் தினந்தோறும் அழுது கொண்டிருக்கிறார்களே?’
தன் கண்ணீரைத் துடைப்பதற்காக முகத்தருகே நெருங்கிய தோழியின் கையை விலக்கி ஒதுக்கினாள் விசாகை.
“தலைவிக்கு விருப்பமில்லையானால் கண்ணீரைத் துடைக்க வேண்டாம் விட்டுவிடு. சுயம்வரத்துக்கு வந்திருக்கிற அரசகுமாரர்கள் எல்லாம் நம் தலைவி ஆனந்தக் கண்ணீர் சிந்துவதாக நினைத்துக் கொள்ளட்டுமே” என்று வேடிக்கையாகக் கூறினாள் குறும்புக்காரியான பணிப்பெண் ஒருத்தி.
‘ஆனந்தக் கண்ணீராமே! ஆனந்தக் கண்ணீர்! கண்ணீரே ஆனந்தம்தானே? பிறருடைய துன்பத்தினால் நம்முடைய மனம் நெகிழுகிறது என்பதற்கு அடையாளம் தானே கண்ணீர். அன்பு செலுத்துவதிலும், மனம் நெகிழ் வதிலும் ஆனந்தமில்லாமல் துக்கமா உண்டாகும்; ஒருவர் இருவருக்காக மனம் நெகிழ்ந்து அழுவதிலேயே இவ்வளவு ஆனந்தமானால், பிரபஞ்சத்தையே எண்ணிப் பிரபஞ்சத்தின் துக்கத்துக்காகவே மெளனமாக அழுதவர்கள், தவம் செய்தவர்கள், சிந்தித்தவர்கள், மதம் கண்டவர்கள், எல்லாரும் எவ்வளவு ஆனந்தத்தை அடைந்திருக்க வேண்டும்?’