362
மணிபல்லவம்
இப்படி எண்ணியவாறே சுயம்வர மண்டபத்துக்குள் நுழையும் வாயிலுக்கு இந்தப் பக்கத்தில் மாலை ஏந்திய கைகள் நடுங்க, மனம் நடுங்க, நினைவுகள் நடுங்க, கண்களில் நீர் நடுங்க விசாகை நின்றாள்.
அளவற்ற துக்கத்தையும், எல்லையற்ற அநுதாபப் பெருக்கையும், குறிப்பதற்கே தமிழில் ஆனந்தம் என்று ஒரு சொல் இருப்பது விசாகைக்கு நினைவு வந்தது. தமிழ்ப் புறப்பொருள் இலக்கணத்தில் போரின்போது வீரக் கணவனை இழந்த மனைவி அவன் நினைவில் மெலிந்து வருந்தும் வருத்தத்தைக் கூறும் பாடலுக்கு ‘ஆனந்தம்’ என்று பெயர் வைத்திருப்பதை இவள் நினைத்தாள். எல்லையற்ற ஆனந்தத்தைத் தந்து கொண்டிருந்த பொருள் அழியும்போது எல்லையற்ற துக்கம் உண்டாகிறது. ஆனந்தத்துக்கும் துக்கத்துக்கும் ஆனந்தமே காரணமாவது பற்றித்தான் தமிழ்ப் புறப்பொருள் இலக்கண ஆசிரியர்கள் துயரத்துக்கும் ஆனந்தம் என்று பெயரிட்டிருக்க வேண்டுமென எண்ணினாள் விசாகை சிந்தனைப் பெருகப் பெருக இவள் கண்களில் நீரும் பெருகிற்று.
கூட்டுக்குள்ளிருந்து வெளியே தலைநீட்டி எட்டிப் பார்க்கும் கிளிக்குஞ்சுபோல், தான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து சுயம்வர மண்டபத்துக்குள் செல்லும் வாயிலில் எட்டிப் பார்த்தாள் விசாகை.
மண்டபத்தில் வரிசை வரிசையாய் அரச குமாரர்கள் வீற்றிருந்தார்கள். இயற்கையாகவே அழகுடையவர்கள் சிலர். செயற்கையாகப் புனைந்து அழகுப்படுத்திக் கொண்டு வந்திருந்தவர்கள் சிலர். நம்பிக்கையோடு வந்தவர்கள், ஆசைப்பட்டு வந்தவர்கள், நம்பிக்கையும், அவ நம்பிக்கையும் கலந்த மனத்தோடு வந்தவர்கள் எல்லாரும் இருந்தார்கள். எல்லாருடைய கண்களும் இவள் மண்டபத்திற்குள் நுழையப் போகிற வழியையே பார்த்துக் கொண்டிருந்தன. இவளோ எல்லாருடைய கண்களிலும் ஆசை ஒன்றே நிறைந்திருந்ததைப் பார்த்தாள். இவள் கைகளும்