நா. பார்த்தசாரதி
363
கைகளிலிருந்த மாலையும் முன்னிலும் அதிகமாய் நடுங்கின.
சுயம்வர மண்டபத்தில் முதன்மையான இடத்தில் அமைச்சர் பிரதானிகள் புடைசூழ இவள் தந்தை சூடாமணிவர்மன் இருந்தார். மண்டபத்தின் நடுவில் வெண் பளிங்குக் கல்லில் செய்த புத்தர் சிலை ஒன்று அமர்ந்த கோலத்தில் காட்சியளித்தது. அந்தச் சிலையின் சாந்தம் திகழும் முகத்தில் வாயிதழ்கள் எப்போதும் மெல்லச் சிரித்துக் கொண்டே இருப்பதுபோல் ஒரு பாவனை அமைந்திருந்தது.
சாதாரண மனிதர்களுடைய அழுகையிலும் ஆனந்தம் இருக்கிறாற்போல் ஞானிகளுடைய சிரிப்பிலும் துக்கம் இருப்பதை அந்தப் புத்தர் சிலையின் முகம் விசாகைக்குக் கூறியது.
இரண்டு தோழிப் பெண்கள் பக்கத்துக்கு ஒருவராக விசாகைக்கு அருகில் வந்து நின்று கொண்டு இவளைச் சுயம்வர மண்டபத்துக்குள் நடத்தி அழைத்துச் சென்றார்கள். இரண்டு கண்களின் அழகைக் காண்பதற்காக எத்தனையோ கண்கள் மலர்ந்தன. ஆனால் அத்தனை பேருடைய ஆவலையும் கிளரச் செய்த அந்த இரண்டு கண்களில் நீர்நெகிழ்ந்திருந்தது.
தோழிகளின் துணையோடு கைகால் நடுங்கிய நிலையில் விசாகை தளர்ந்தாற்போல் மெல்ல நடந்து வந்து சுயம்வர மண்டபத்தில் வீற்றிருந்தவர்களையெல்லாம் பார்த்தாள்.
‘தன் மகள் எந்த நாட்டு இளவரசனுக்கு மாலையிடப் போகிறாள்’ என்ற ஆர்வம் பெருகும் விழிகளால் இமையாது பார்த்துக் கொண்டிருக்கும் தந்தை சூடாமணிவர்மனையும் நிமிர்ந்து நோக்கினாள். பெண்ணின் கண்கள் ஏன் கலங்கியிருக்கின்றன என்பது தந்தைக்குப் புரியவில்லை. தீவினைகளின் விளைவுகள் சூழ்ந்து வரும்போது என் செய்வதென்று தெரியாமல் தடுமாறி நிற்கும் உயிர் போல் விசாகை தயங்கி நின்றாள். மருண்டு பார்த்தாள்.