364
மணிபல்லவம்
கண்ணீர் பெருக்கினாள். ‘குழந்தை ஏன் அழுகிறாள்?’ என்று தோழிகளை அருகில் அழைத்துக் கேட்டான் சூடாமணிவர்மன். ‘கண்ணுக்கு இட்ட மை கரிந்து நீர் வருகிறது. அழவில்லை’ என்று தங்களுக்குத் தோன்றியதைக் கூறினார்கள் அவர்கள். அரசனும் அப்படித் தானிருக்கும் என நம்பினான். உலகத்தின் கண்ணீரைத் துடைப்பதற்காக அவள் கண்ணில் நீர் பிறந்திருக்கிறதென்று அவர்களுக்கு எப்படித் தெரியும்? பாவம்! உண்மையைத் தெரிந்து கொள்ள இயலாதவரை தங்களுக்குத் தெரிந்ததைத்தானே உண்மையாகக் கொள்ள வேண்டும்?
சுயம்வர மண்டபத்திலிருந்த எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தயங்கி நின்ற விசாகை விரைந்து நடந்தாள். தோழிகள் இவளைப் பின்தொடர முடியாத வேகத்தில் நடந்தாள். மண்டபத்தின் நடுவில் சிரித்துக் கொண்டிருந்த புத்த சிலையை நெருங்கினாள். சுற்றிலும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தபின் தன் கைகளிலிருந்த மணமாலையை அந்தச் சிலையின் பாதங்களில் பயபக்தியோடு வைத்துவிட்டு வணங்கினாள். இவள் கைகளிலிருந்த மாலையைப் பெற்றபின் அந்தச் சிலையின் முகத்தில் சாந்தமும், சிரிப்பும் இன்னும் அதிகமானாற்போல் ஒரு தோற்றம் ஏற்பட்டது. சூடாமணிவர்மன் — இருக்கையிலிருந்து எழுந்து மகளை நோக்கி ஓடிவந்தான்.
“இது என்ன காரியம் செய்கிறாய் மகளே! நீ வாழ்க்கைப்பட வேண்டியவருக்குச் சூட்டும் மாலையை வணங்கப்பட வேண்டியவருடைய பாதங்களில் சூட்டுகிறாயே!”
“எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் இவருடைய கொள்கைகளுக்கு வாழ்க்கைப்பட்டுவிட்டேன் அப்பா. வேறு விதமாக மனிதருக்கு வாழ்க்கைப்படும் ஆசை எனக்கு இல்லை. அப்படி வாழ நான் பிறக்கவில்லை என்று என் மனமே எனக்குச் சொல்கிறது! வாழ்க்கைப்படுவதற்கு ஒருவரும் வணங்கப்படுவதற்கு