பக்கம்:மணி பல்லவம் 2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

365

ஒருவருமாக இருவரிடம் பக்தி செலுத்த எனக்கு விதியில்லை. என்னை விட்டு விடுங்கள். நான் விடுபட்டுப் போக வேண்டும்!”

“எங்கே போக வேண்டும்? மகளே?”

“உலகத்தின் கண்ணீரைத் துடைப்பதற்குப் போக வேண்டும்.”

“நீ போனபின் என்னுடைய கண்ணீரை யார் துடைப்பார்கள்?”

இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று விசாகைக்குத் தெரியவில்லை. தந்தையின் பாதங்களைப் பற்றிக் கொண்டு மேலும் கண்ணீர் பெருக்கினாள். தந்தையின் பாதங்களையும், பாசங்களையும் விலக்கி விட்டு இவள் எழுந்தபோது, தந்தை வேரற்ற ஒரு மரம் போல் மயக்கமுற்றுக் கீழே விழுந்தார். அழுக்குகளை நீக்குவது போலத் தன் உடம்பிலிருந்து பொன்னையும், மணியையும், பட்டையும் வேறாக்கி விட்டு விசாகை புறப்பட்டாள். உலகத்தின் கண்ணிரைத் துடைப்பதற்காகத் தன் சுகங்களிலிருந்து விடுபட்டுப் புறப்பட்டாள்...”


10. தலைவணங்கிய தன்மானம்

விசாகையின் கதையை முற்றிலும் கேட்டு முடித்ததும் தான் மீண்டும் இளைத்துப் போய்விட்டதாக உணர்ந்தான் இளங்குமரன். மனத்தின் வலிமையால் உலகத்தை வென்று நிற்பவர்களைப் பற்றி அறிந்தாலும், நினைத்தாலும், அந்தக் கணத்தில் தான் குன்றி ஒடுங்கிப் போனதாக ஏற்படும் மனத்தாழ்வை அவனால் மீற முடியவில்லை.

உலகில் மிகச் சிறந்த வலிமை மனத்தின் வலிமைதான். மிகச் சிறந்த விடுதலையும் மனத்தின் விடுதலைதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/71&oldid=1149686" இலிருந்து மீள்விக்கப்பட்டது