366
மணிபல்லவம்
புலன்களிலிருந்து விடுபட்டுச் சிந்திக்கும் தூய மனம்தான் பெரிய சுதந்திரம். புலன்களுக்கும், உணர்வுகளுக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கிறவர்கள் உடம்பினால் விடுதலை பெற்று என்ன பயன்? என்றெல்லாம் விசாகையின் வரலாற்றைக் கேட்டிருந்த கிளர்ச்சியில் எண்ணினான் இளங்குமரன். அவள் வரலாறு அவன் மனத்தில் தூய்மைக் கிளர்ச்சியைத் தூண்டியிருந்தது.
உலகத்தின் கண்ணீரைத் துடைப்பதற்காகத் தாமும் கண்ணீர் சிந்திய அந்த விழிகளை இன்னொரு முறை தரிசனம் செய்ய வேண்டுமென்று நிமிர்ந்தான் அவன். விசாகையின் அழகிய கண்களில் இப்போதும் நீர் நெகிழ்ந்திருந்தது. பழைய நிகழ்ச்சிகளைக் கேட்க நேர்ந்ததால் சிறிதளவு அவள் கலங்கியிருந்தாள்.
அடிகள் இளங்குமரனைக் கேட்டார்.
“இவளுடைய வாழ்க்கையைப் பற்றி என்ன நினைக்கிறாய், இளங்குமரா?”
“நினைப்பதற்குரிய வாழ்க்கை அன்று இது! வணங்குவதற்குரிய வாழ்க்கை ஐயா! இந்த அம்மையாருடைய மனத்தின் வலிமையைப் பற்றிக் கூறியபோது என்னுடைய மனத்தின் ஏழைமையை நான் உணர்ந்தேன்.”
“நல்லது! இவளுடைய கதையை எந்த விளைவுக்காக உன்னிடம் சொல்ல வேண்டுமென்று விரும்பினேனோ அந்த விளைவு உன்னிடம் நிகழ்ந்திருக்கிறது. மேலும் கேள். சாவக நாட்டிலிருந்து இவள் மணிபல்லவத்திற்கு வந்தாள். அங்கே புத்த பீடிகையைத் தரிசனம் செய்தாள். கோமுகிப் பொய்கையைக் கண்டாள். சமந்தகூட மலைக்குச் சென்று அங்குள்ள என் நண்பரான புத்ததத்தரிடம் சமய ஞானம் பெற்றாள். ‘மண் திணிந்த இவ்வுலகத்தில் வாழ்கிறவர்களுக்கு உணவு கொடுத்து உதவுகிறவர்கள் உயிர் கொடுப்பதற்கு இணையான செயலைச் செய்பவர்கள்’ என்ற கருத்துடன் தன் அட்சய பாத்திரத்தைப் பலரிடம் ஏந்தி உணவை நிரப்பி வந்து, நிரம்ப வழியின்றித் தவிக்கும் ஏழை